ஈரான், யெமன் கடல் பகுதியில் ரோந்து செல்ல இராணுவ கூட்டணி ஒன்றுக்கு அமெரிக்கா திட்டம்

ஈரான் மற்றும் யெமன் கடற்பகுதியை பாதுகாப்பதற்கு சர்வதேச இராணுவ கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து அமெரிக்கா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

முக்கிய வர்த்தகப் பாதையான இந்த கடற்பகுதியில் சுதந்திரமாக பயணிப்பதை உறுதி செய்வதற்கு இவ்வாறான ஒரு கூட்டணி அவசியமாக இருப்பதாக அமெரிக்க கூட்டுப் படைகளின் தளபதி மரைன் ஜெனரல் ஜோசப் டுன்போர்ட் குறிப்பிட்டார்.

கடந்த மே மற்றும் ஜுன் மாதங்களில் இடம்பெற்ற எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு ஈரான் காரணம் என்று அமெரிக்கா குற்றம்சுத்துகிறது. இந்தத் திட்டங்களை ஆதரித்து “அரசியல் விருப்பம்” கொண்ட பல நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக ஜெனரல் டுன்போர்ட் குறிப்பிட்டார்.

கண்காணிப்பு முயற்சிகளுக்கு தலைமை வகித்து கப்பல்களை கட்டுப்படுத்துவது மற்றும் நிர்வகிக்கும் நடவடிக்கைகளை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. எனினும் ஏனைய நாடுகள் இதற்கு படகுகள் தந்து உதவ எதிர்பார்க்கப்படுகிறது.

வளைகுடா மற்றும் செங்கடலை அடைவதற்கு ஹார்மோஸ் மற்றும் பாப் அல் மன்பாப் நீரிணைகள் மூலோபாய கப்பல் பயணப்பாதையாக உள்ளன. இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கையை பொறுத்து இந்த முயற்சியின் அளவு தங்கியிருப்பதாக ஜெனரல் டுன்போர்ட் குறிப்பிட்டார்.

“சிறிய அளவான பங்களிப்பு மூலம் எம்மால் சிறிய அளவான திட்டத்தையே முன்னெடுக்க முடியும்” என்று குறிப்பிட்டார் அவர், “பங்கேற்க விரும்பும் நாடுகளை அடையாளம் கண்டு அதனை நாம் விரிவுபடுத்துவோம்” என்றார். பாப் அல் மன்பாப் ஊடாக ஒவ்வொரு நாளும் சுமார் நான்கு மில்லியன் பீப்பாய் எண்ணெய் உலகெங்கும் விநியோகிக்கப்படுகின்றன.

ஓமான் வளைகுடாவில் கடந்த மாதம் இரு எண்ணெய் கப்பல்கள் மீது இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து ஈரான் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஈரான் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தது. கடந்த மே மாதம் பிராந்தியத்தில் நான்கு எண்ணெய் கப்பல்கள் மீது இடம்பெற்ற தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றிருந்தது.

கடந்த ஜூனில் இடம்பெற்ற தாக்குதலின் ஒருசில தினங்களின் பின் வளைகுடாவில் ஈரானியப் படை அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியது.

ஈரானிய வான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவுக்கு தெளிவான செய்தி ஒன்று வழங்கப்பட்டதாக ஈரான் அப்போது எச்சரித்திருந்தது. எனினும் அந்த ஆளில்லா விமானம் சர்வதேச வான்பகுதியிலேயே இருந்ததாக அமெரிக்கா வலியுறுத்துகிறது. “ஈரான் மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்்.

அமெரிக்கா பதில் தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு உத்தரவிட்டபோதும் பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது.

Thu, 07/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை