விமானத்தில் இருந்து விழுந்தவரின் உடல் லண்டன் தோட்டத்தில் மீட்பு

கென்யா ஏர்வேஸ் விமானத்திலிருந்து விழுந்த ஆடவரின் சடலம் லண்டனில் உள்ள தோட்டம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லண்டனின் கிலாப்ஹாம் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு வட்டாரத்திலிருந்து சடலம் குறித்த தகவல் கிடைத்ததாக லண்டன் மாநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கென்யத் தலைநகர் நய்ரோபியில் இருந்து வந்த இந்த விமானம் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது, விமானத்தின் அடிப்பக்கத்தில் தரையிறங்கும் கருவி இருக்கும் பகுதியிலிருந்து ஆடவர் விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

கிளபாம் தோட்டத்தில் சூரிய குளியலில் இருந்த உள்ளூர்வாசி ஒருவர் படுத்திருந்த இடத்துக்கு ஒரு மீற்றருக்கு அப்பால் இந்த நபர் விழுந்ததாக அருகே இருந்த ஒருவர் தெரிவித்தார். சத்தம் கேட்டு மாடியில் இருந்து கீழே பார்த்தபோது, அங்கு கிடந்த இந்த சடலத்தை கண்டதாகவும், தோட்டத்தில் சுவரில் இரத்த கறை இருந்ததை பார்த்த்தாகவும் பெயர் வெளியிட விரும்பாத அந்த நபர் கூறியுள்ளார்.

சட்டவிரோதமாகப் பயணம் மேற்கொண்ட ஆடவர், விமானத்திற்குள் ரகசியமாக நுழைந்து மறைந்து கொண்டிருந்ததாகக் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஆடவர் இன்னும் அடையாளங்காணப்படவில்லை. அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

விமானத்தின் தரையிறங்கும் கருவி இருக்கும் பகுதியில் உணவு, தண்ணீர், பை ஆகியவற்றைக் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹீத்ரு விமானப் பாதையில் இவ்வாறான உயிரிழப்பு பதிவாவது இது முதல் முறையல்ல. 2015இல் ஜொஹன்னஸ்பேர்க்கில் இருந்த வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பற்றிக்கொண்டு வந்த இருவரில் ஒருவரது உடல் கட்டிடம் ஒன்றின் கூரைக்கு மேல் இருந்து மீட்கப்பட்டதோடு மற்றையவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.

2012 இல் கேப்டவுனில் இருந்து ஹீத்ரு விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்தின் சக்கரங்கள் உள்ள பகுதியில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டது.

Wed, 07/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை