ரிஷாத்துக்கு எதிராக மீண்டும் பிரேரணை வந்தால் ஐ.தே.க நிச்சயம் தோற்கடிக்கும்

அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்த ரிஷாத் பதியுதீன் மீண்டும் அமைச்சுப் பதவியை ஏற்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவாரேயானால் அதனைத் தோற்கடிக்க ஐ. தே. க. ஒருபோதும் பின்வாங்க மாட்டாது என மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் விவசாயத் துறை இராஜாங்க அமைச்சருமான வசந்த அலுவிஹாரே தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹாரயின் 30வது வருட அரசியல் வாழ்வை முன்னிட்டு மாத்தளை “சுவிஸ் டேல்” ஹோட்டல் மண்டபத்தில் நடாத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

கடந்த வாரம் ஜே. வி. பி. யின் ஆட்சியிலிருக்கும் அரசுக் கெதிராக களுத்துறையிலிருந்து மாபெரும் பேரணியை நடாத்திவிட்டு ஐ. தே. க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை முன் வைத்தது. ஜே. வி. பி. யின் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஐ. தே. க யும் ஏனைய கட்சிகளின் ஒற்றுமையோடு படுதோல்வியடையச் செயதோம். ரிஷாத் பதியுதீனுக்கெதிராக அத்துரலிய ரத்தன தேரர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்தால் ஜே. வி. பி யினர் தழுவிக்கொண்ட இதே படுதோல்வியை அத்துரலிய ரத்தன தேரரும் தழுவிக் கொள்ள நேரிடும் என்பதை ரத்தன தேரர் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஐ. தே. க. இந்நாட்டிலிருக்கும் பழைமை வாய்ந்த அரசியல் கட்சி. ஐ. தே. கட்சிக்கென ஒரு அரசியல் வரலாறு உள்ளது. அதற்கென ஒரு அரசியல் கொள்கை உள்ளது. நீண்ட அரசியல் வரலாற்றுடன் தீர்க்கமான அரசியல் கொள்கைகளையுடைய ஐ. தே. கட்சியையும், அதனைச் சார்ந்த அமைச்சர்களையும் ஒருசில சந்தர்ப்பவாத மற்றும் இனவாத அரசியல்வாதிகளிடம் தாரைவார்க்கவோ சரணாகதியடைய செய்யவோ ஐ. தே. கட்சியைச் சார்ந்த நாம் ஒருபோதும் தயாரில்லை. அதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்கவும் மாட்டோம்.

கடந்த வாரம் ஜே. வி. பி. யினர் அரசுக்கெதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்கச் செய்து ஜே. வி. பி யினரை எவ்வாறு முழங்காலில் இருக்கச் செய்தோமோ அமைச்சுப் பதிவியை மீண்டும் பொறுப்பேற்கும் ரிஷாத் பதியுதீனுக்கெதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் அதனைத் தோற்கடிக்கச் செய்து எமது ஆட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கெளரவத்தை நிச்சயம் நாம் பாதுகாப்போம்.

பதவியிலிருக்கும் இந்த ஆட்சியை எந்த அரசியல் ஜாம்பவான்களினாலும் இலகுவில் கவிழ்க்க முடியாது. அடுத்த நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் நாட்டில் ஜனாதிபதித்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கடந்த காலங்களைப் போன்று பொது அபேட்சகர் என்ற சொல்லுக்கே இடமில்லை. ஜனாதிபதித்தேர்தலில் ஐ. தே. கட்சி அபேட்சகர்கள் பற்றி பலரது பெயர்கள் பேசப்பட்டபோதும், எமது கட்சியின் நிறைவேற்றுக் குழுவின் முடிவே இறுதி முடிவாகும். ஐ. தே. கட்சி முன்வைக்கின்ற ஜனாதிபதி அபேட்சகரையே வெற்றிபெறச் செய்யும்படி நாம் இந்நாட்டு வாக்காளர்களை கேட்டுக்கொள்கிறோம்.

(உக்குவளை விஷேட நிருபர்)

Wed, 07/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை