53வது ஆசிய ஆணழகன் போட்டி ராஜகுமாரன் இன்று சீனா பயணம்

53 வது ஆசிய ஆணழகன் வெற்றிக் கனவுடன் மலையக இளைஞன் ராஜகுமாரன் இன்று (24) அதிகாலை சீனா நோக்கி பயணமானார்.

சீனாவின் ஏப் இன் நகரில் நடைபெறுகின்ற 53 ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் 60 கிலோ எடை பிரிவிலும் 23 வயதுக்குட்பட்ட ஜூனியர் சம்பியன்ஷிப் ஆகிய இரண்டு போட்டிகளிலும் பங்கு பற்றி தங்கப் பதக்கம் வென்று டுபாயில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச ஆணழகன் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெறுவதே இவரது இலக்கு. சீனாவின் ஏப் இன் நகரில் நடைபெறுகின்ற போட்டியில் பங்குபற்றுவதற்காக இன்று அதிகாலை சீனா நோக்கி பயணமானார்.

மாதவன் ராஜகுமாரன் பெயரில் ராஜகுமாரனாக இருந்தாலும் ஒரு தோட்டத் தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து மிகவும் பின்தங்கிய பொருளாதார நிலையுடன் தனது கல்வியைத் தொடர்ந்து மலையக மக்கள் சரித்திரத்தில் என்றுமே நினைத்துப் பார்க்க முடியாத ஆணழகன் போட்டியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இன்று மலையகத்திற்கும் எங்களுடைய நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் தான் பங்குபற்றிய போட்டிகளிலெல்லாம் தங்கப் பதக்கங்களை குவித்து வருகிறார் ராஜகுமாரன்.

அவர் பாடசாலை காலத்தில் அதாவது கா.பொ. த சாதாரண தரம் படிக்கின்ற பொழுது அப்போது பதினாறு வயது. 2015ஆம் ஆண்டு மத்திய மாகாண ரீதியில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் பங்கு பற்றி அந்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். அதனைத் தொடர்ந்து அதே ஆண்டு தேசிய மட்டத்தில் பாடசாலைகளுக்கு இடையிலான போட்டியில் பங்குபற்றி தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.

2016ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் திறந்த மட்டத்தில் நடைபெற்ற போட்டியில் ஸ்ரீலங்கா ஜூனியர் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றுக் கொண்டார். அதிலும் 23 வயதிற்கு உட்பட்ட போட்டியில் தங்கப் பதக்கத்தை தனதாக்கினான். அதேபோல 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற 55 கிலோ எடைப் பிரிவில் தங்கம், 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் மிஸ்டர் ஸ்ரீலங்கா திறந்த மட்ட போட்டியிலும் கலந்து கொண்டு தங்கப் பதக்கம். 2018 ஆம் ஆண்டு அகில இலங்கை தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் 60 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளான். இவை அனைத்தும் இலங்கையில் நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றி பெற்ற வெற்றிகளாகும்.

இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பொழுது நானும் வெளிநாடுகளிலே நடைபெறுகின்ற போட்டியில் கலந்து கொள்ள முடியுமா என்ற ஒரு கனவோடு தன்னுடைய பயிற்சியை மேற்கொண்டிருந்தபோது இரண்டாயிரத்தி பதினெட்டாம் ஆண்டு நேபாளத்திக் காத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய ஆணழகன் போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அங்கு 60 கிலோ எடைப்பிரிவில் பங்கு பற்றி தங்கப்பதக்கத்தை வெற்றி பெற்று வெளிநாடுகளில் முதல் தங்கப்பதக்கத்தை பதிவு செய்தான்.

இது தொடர்பாக ராஜகுமாரன் கருத்து தெரிவிக்கையில்,

சாதிப்பதற்கு வறுமை ஒரு பொருட்டல்ல என்பதை நான் உணர்ந்திருக்கின்றேன். நான் ஆரம்ப காலத்தில் இந்த ஆணழகன் போட்டிக்கு வந்த பொழுது தினக்கூலியாக தோட்டங்களில் சென்று வேலை செய்து இருக்கின்றேன். என்னுடைய தாயாரும் தந்தையும் வழங்கிய ஒத்துழைப்பும் தான் இந்த அளவிற்கு நான் வளர்ந்து வருவதற்கு காரணமாக இருந்திருக்கின்றது. எனவே எதிர்காலத்தில் உரிய அளவில் அனுசரணையாளர்கள் கிடைப்பார்களானால் நிச்சயமாக என்னால் இன்னும் பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியும்.

இந்த மலையக இளைஞனுக்கு கைகொடுக்கப் போவது யார்? பல இளைஞர்கள் தங்களிடம் திறமைகள் இருந்தும் வறுமையால் சாதிக்க முடியாமல் இருக்கின்றார்கள்.

நுவரெலியா தினகரன் நிருபர்

Wed, 07/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை