2/3 பலம் இருந்தும் முடியாததை மஹிந்த மீண்டும் எப்படி செய்வார்?

மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தும் மேற்கொள்ள முடியாத அபிவிரு த்தியை மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்து மேற்கொள்ள முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பெரும்பான்மை அரசாங்கத்தை வைத்துக்கொண்டு ராஜபக்‌ஷ அரசாங்கத்தினால் மேற்கொள்ள முடியாத அபிவிருத்தியை

பெரும்பான்மை அற்ற அரசாங்கத்தைக் கொண்டுள்ள நாம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காணி உறுதி வழங்கும் நிகழ்வு எம்பிலிபிட்டியவில் நேற்றைய தினம் இடம்பெற்றது.இந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:-

கடந்த அரசாங்கத்தினால் ஐந்து வருடத்திற்கு அபிவிருத்திக்காக செலவிட்ட நிதியை எமது அரசாங்கம் ஒரு வருடத்திற்காக செலவிட்டுள்ளது. இந்த வகையில் அரசாங்கத்திற்கு பெரும்பான்மையை பெற்றுக்கொடுத்தால் இரண்டு வருடத்திற்குள் பாரிய அபிவிருத்தி மூலம் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்.

எவரும் நினைத்திராத நேரத்திலே நாம் இந்த அரசாங்கத்தை பொறுப்பெடுத்தோம். அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வோமென எவரும் நினைக்கவுமில்லை. நாம் பெரும்பான்மை அற்ற அரசாங்கத்தையே பாரமெடுத்தோம். 2015 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்தோம். அதன் பின் அக்கட்சி அதிலிருந்து விலக்கிகொண்டிருந்த நிலையில் பெரும்பான்மை அற்ற அரசாங்கத்தை அமைத்து முன்னோக்கிச் செல்கின்றோம். தற்போது இந்த நாட்டில் காணி உரிமை இல்லாதவர்களுக்கு உறுதி பத்திரத்தை பெற்றுக்கொடுக்க முடியுமானால் 2010ஆம் ஆண்டிலிருந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டிருந்த அரசாங்கத்தினால் ஏன் இதனை செய்திருக்க முடியவில்லை.

அன்று பெரும்பான்மையைக் கொண்டிருந்த அரசாங்கம் சர்வதேச ரீதியில் புறக்கணிக்கப்பட்டிருந்ததுடன் ஜி. எஸ்.பி பிளஸ் போன்ற சலுகைகளும் இல்லாதொழிக்கப்பட்டிருந்தது. இதற்கிணங்க பெரும்பான்மை அற்ற நிலையிலுள்ள தற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மையை அடுத்த தேர்தலில் பெற்றுக்கொடுத்தால் பெரும் அபிவிருத்தி நாட்டில் முன்னெடுக்கப்படும். பொருளாதாரம் ஸ்திரமானதாக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

Mon, 07/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை