காஷ்மீரில் பாரிய தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்

இந்திய இராணுவம் குவிப்பு; அமர்நாத் யாத்திரை நிறுத்தம்

பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் காஷ்மீரில் மிகப் பெரிய தாக்குதலை நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் 10,000 இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகவும்,

அந்தக் கூட்டத்தில் எடுத்த முடிவின் அடிப்படையிலே காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் சுமார் 100

கம்பனிகளைச் சேர்ந்த 10,000 இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதனால் காஷ்மீர் மாநிலம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் ஏற்கனவே சுமார் 65,000 இராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய வீரர்கள் பாதுகாப்புப் பணிகளில் இணைந்துள்ளதால், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பாதுகாப்பு மேலும் அதிகரித்துள்ளது.

காஷ்மீரில் தொடர்ந்து துணை இராணுவப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருவது ஏன் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்பு ஒன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.மிகப் பெரிய தீவிரவாதத் தாக்குதல் நடக்கப் போவதாக உளவுத் தகவல்கள் வந்துள்ளன. இதைத் தடுக்கவே தற்போது அங்கு படைகள் குவிக்கப்பட்டுள்ளன. ரோந்துப் பணிகளும் அங்கு இதனால்தான் அதிகரிக்கப்பட்டுள்ளன. இனி வரும் நாட்களில் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து துணை இராணுவப் படையினர் குவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அங்கு அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக காஷ்மீர் பிரச்சினை மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் 10000 துணை இராணுவ படையினர் காஷ்மீர் எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் கூடுதல் வீரர்கள் விரைவில் காஷ்மீர் எல்லைக்கு அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த முதலாம் தேதி காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை தொடங்கியது. கடந்த 27 நாட்களில் மட்டும் மொத்தம் 3,17,726 பேர் அங்கு குகையில் தரிசனம் செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில் மொத்தமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு மழை காரணமாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு அதிகமாக மழை பெய்து வருவதால், யாத்திரை நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஒரு மாதமாகவே அங்கு மழை பெய்கிறது. ஆனால் அப்போதெல்லாம் யாத்திரையை நிறுத்தவில்லை. இப்போது மட்டும் ஏன் நிறுத்தி உள்ளனர் என்று பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தீவிரவாதத் தாக்குதல் குறித்த எச்சரிக்கையை அடுத்தே இந்த நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டுள்ளது.

 

Mon, 07/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை