சிரிய சந்தை பகுதியில் ரஷ்ய வான் தாக்குதல்: 19 பேர் பலி

வடமேற்கு சிரியாவின் சந்தை ஒன்றில் ரஷ்யா நடத்திய வான் தாக்குதலில் பதினாறு பொதுமக்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இத்லிப் மாகாணத்தில் மராத் அல் நூமான் நகரில் இருக்கும் மொத்த விற்பனை மரக்கறிச் சந்தை ஒன்றில் கடந்த ஞாயிரன்று இடம்பெற்றிருக்கும் இந்தத் தாக்குதலில் மேலும் 45 பேர் காயமடைந்ததாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

இடிபாடுகளில் தொடர்ந்து பலர் சிக்கியிருப்பது மற்றும் பலரும் படுகாயங்களுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக காண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் 16 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தபோதும் எஞ்சிய மூவரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்று மேற்படி கண்காணிப்புக் குழுவின் தலைவர் ரமி அப்துல்ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். ஜிஹாதிக்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்லிப் பிராந்தியத்தில் சிரியா மற்றும் அதன் கூட்டணியான ரஷ்யா நடத்திய வான் தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஒரு தினத்திற்குப் பின்னரே இந்த வான் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இத்லிப் மீது கடந்த ஏற்பரல் தொடக்கம் சிரிய அரச படை மற்றும் ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் உள்ள மில்லியன் கணக்காக மக்களை பாதுகாக்கும் நோக்கில் கடந்த செப்டெம்பரில் யுத்த தடுப்பு பகுதி ஒன்றை உருவாக்கிய நிலையிலேயே அங்கு தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த வன்முறைகளால் 650க்கும் அதகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். முன்னாள் அல் கொய்தா கிளையாக இயங்கிய ஹயாத் அல் தஹ்ரிர் அமைப்பு இங்கு முழு கட்டுப்பாட்டை வைத்திருப்பதோடு ஏனைய ஜிஹாதிக்கள் மற்றும் கிளர்ச்சியாளர்களும் நிலைகொண்டுள்ளனர்.

Tue, 07/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை