விருதோடை 16 வயதின் கீழ் கரப்பந்தாட்ட அணி தேசிய போட்டிக்கு தெரிவு

புத்தளம் தெற்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலய 16 வயதின் கீழ் கரப்பந்தாட்ட அணி வடமேல் மாகாண மட்டத்தில் இடம்பெற்ற போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று தேசிய போட்டியில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளதாக வித்தியாலயத்தின் விளையாட்டுத் துறை பொறுப்பாசிரியர் ஏ. எச். எம். மரைக்கார் தெரிவித்தார். இந்த மாகாண மட்டப் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை குளியாபிட்டி சில்பசாலிகா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றபோதே இவ்வித்தியாலய அணி மாதம்பை சேனநாயக்கா வித்தியாலய அணியுடன் விளையாடி மூன்றாம் இடத்தைப் பெற்றது.

மாணவன் ஏ. எம். அஸ்ரானை அணித்தலைவராகக் கொண்ட விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலய அணி முதலில் கோட்ட மட்ட அணிகளுக்கிடையிலான போட்டியில் விளையாடி அதன் இறுதிப் போட்டியில் பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் வித்தியாலய அணியை வென்று முதலிடத்தைப் பெற்று வலய மட்டத்திற்கு தகுதி பெற்றிருந்தது. அதன் பின்னர் ஆனமடுவவில் இடம்பெற்ற வலய மட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று மாகாண மட்டத்திற்குத் தெரிவாகியே குளியாபிட்டியில் இடம்பெற்ற மாகாணப் போட்டியில் விளையாடி இவ்வாறு மூன்றாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியுள்ளது.

இவ்வாறு 16 வயதின் கீழ் கரப்பந்தாட்டப் போட்டியில் தேசிய மட்டத்திற்குத் தெரிவாகிய இவ்வித்தியாலய அணிக்கு வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் விஷேட நிருபர்

Wed, 07/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை