ஹொங்கொங் ஜனநாயக ஆதரவு போராட்டத் தலைவர் விடுதலை

ஹொங்கொங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டத்தை வழிநடத்தியதற்காகச் சிறைத் தண்டனை பெற்ற 22 வயது ஜோஷுவா வோங் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு அம்ப்ரெல்லா மூவ்மன்ட் எனும் குடைகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை அவர் வழிநடத்தினார். அப்போது வோங்கிற்கு 17 வயதாக இருந்தது.

ஆர்ப்பாட்டங்களைக் கலைக்கவிடாமல் தடுத்ததை ஒப்புக்கொண்ட அவருக்கு அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

6 நாட்கள் மட்டுமே அவர் சிறையில் கழித்தார். விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த காலத்தில் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மாதம் அவர் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

சிறைத்தண்டனை 3 மாதங்களிலிருந்து 2 மாதங்களுக்குக் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், விடுதலை செய்யப்பட்ட பின்னர், செய்தியாளர்களிடம் வோங் பேசினார்.

சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்று தொடர்பில் தற்போது நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து அவர் கருத்துக்கூறினார். அந்த விவகாரம் தொடர்பில் ஹொங்கொங் தலைமை நிர்வாகி கெரி லாம் பதவி விலகவேண்டும் என்று வோங் கேட்டுக்கொண்டார்.

ஹொங்கொங்கின் தலைவராக நீடிக்க, லாம் தகுதியற்றவர் என்றும் அவர் கூறினார். குறைகூறல்களை ஏற்றுக்கொண்டு பொறுப்பில் இருந்து அவர் விலகவேண்டும் என்றும் வோங் கூறினார்.

இதனிடையே ஹொங்கொங் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை எதிர்த்துக் கடந்த சில நாட்களாக அந்நகரில் பெரிய அளவில் நடந்து வந்த ஆர்ப்பாட்டங்கள் தற்போது மெதுவாகத் தணிந்துவருகின்றன.

ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுக்க வீதிகளில் குவிக்கப்படிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். போராட்டத்தின் போது அவசர மருத்துவ உதவி வாகனத்திற்கு மக்கள் வழிவிட்டது உலக மக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ஆர்ப்பாட்டத்தின் போது உயிரிழந்த ஆடவர் ஒருவருக்கும் ஹொங்கொங் மக்கள் அஞ்சலி செலுத்தினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் சுமார் 2 மில்லியன் பேர் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

ஹொங்கொங் தலைமை நிர்வாகி கெரி லாம் ஆர்ப்பாட்டம் தொடர்பாக நகர மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார். சில வகைக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவோரை வழக்கு விசாரணைக்காகச் சீனாவுக்கு அனுப்பி வைப்பதை அனுமதிக்கும் சட்டமூலம் குறித்து ஹொங்கொங் வாசிகள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அந்த சட்டமூலம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அதனை முற்றாக அகற்ற மக்கள் அரசாங்கத்துக்கு நெருக்குதல் அளித்து வருகின்றனர்.

Tue, 06/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை