சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 11 ஆயிரம் ஓட்டங்களை கடந்த விராட் கோலி

பாகிஸ்தானுக்கு எதிராக 57 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 11 ஆயிரம் ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார் விராட் கோலி.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி தலைவர் விராட் கோலி 57ஓட்டங்களை எடுத்தபோது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனது 11 ஆயிரம் ஓட்டங்களை பதிவு செய்தார். அவர் 222 இன்னிங்சில் இந்த ஓட்டங்களை கடந்தார்.

இதன்மூலம் 11 ஆயிரம் ஓட்டங்களை விரைவாக கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 276 இன்னிங்சில் 11 ஆயிரம் ஓட்டங்களை கடந்ததே சாதனையாக இருந்தது. விராட் கோலி தற்போது அதை முறியடித்துள்ளார். ரிக்கி பொண்டிங் 286 இன்னிங்ஸ் உடன் 3-வது இடத்திலும், கங்குலி 288 இன்னிங்ஸ் உடன் 4-வது இடத்திலும், கலிஸ் 293 இன்னிங்ஸ் உடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

சச்சின் தெண்டுல்கர் 10 ஆயிரம் ஓட்டங்களில் இருந்து 11 ஆயிரம் ஓட்டங்களை கடக்க 17 இன்னிங்ஸ் மட்டுமே எடுத்துக் கொண்டார். அதேபோல்தான் விராட் கோலியும் 17 இன்னிங்சில் 10 ஆயிரம் ஓட்டங்களில் இருந்து 11 ஆயிரம் ஓட்டங்களை கடக்க எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடிய ரோஹித் சர்மா 113 பந்துகளில் 3 சிக்சர்கள், 14 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 140 ஓட்டங்களை எடுத்தார். இம்முறை உலகக் கிண்ணத்தில ரோஹித் சர்மா பெற்றுக்கொண்ட 2ஆவது சதம் இதுவாகும்.

இந்த போட்டியில் 3 சிக்சர்கள் விளாசியதன் மூலம் ஒருநாள் அரங்கில் அதிகம் சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்திய வீரர்களில் சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ரி-20, ஒருநாள் போட்டி) மகேந்திர சிங் டோனியும், ரோஹித் சர்மாவும் 355 சிக்சர்கள் விளாசி முதலிடத்தில் இருந்தனர். தற்போது, ரோஹித் சர்மா 358 சிக்சர்கள் விளாசி டோனியை பின்னுக்கு தள்ளி உள்ளார்.

குறைந்த ஒருநாள் போட்டிகளில் 24 சதங்கள் அடித்த வீரர்களில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். சச்சின் 219 போட்டிகளில் 24 சதங்கள் அடித்தார். ரோஹித் சர்மா 203 போட்டிகளில் 24 சதங்கள் அடித்து சச்சினை முந்தியுள்ளார்.

குறைந்த போட்டிகளில் 24 சதம் அடித்த வீரர்கள்

142 – ஹஷிம் அம்லா (தென்னாபிரிக்கா)

161 – விராட் கோஹ்லி (இந்தியா)

192 – ஏபி டிவில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா)

203 – ரோஹித் சர்மா (இந்தியா)

219 – சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் மகேந்திர சிங் டோனி புதிய சாதனை படைத்து இருக்கிறார். இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் மாத்திரம் தான் மற்றைய இந்திய வீரர்களை விட ஒருநாள் போட்டிகளில் அதிக முறை விளையாடி இருக்கிறார்.

சச்சின் மொத்தம் 463 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் அதிக முறை இறுதி பதினொருவர் அணியில் இடம்பெற்ற வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இரண்டாவதாக ராகுல் டிராவிட் மொத்தம் 340 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இடம்பெற்றிருந்தார். தற்போது ராகுல் டிராவிட்டின் சாதனையை டோனி முறியடித்து இருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றதன் மூலம் அவர் இந்திய அணிக்காக அதிக முறை ஒருநாள் அணியில் இடம்பிடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுக் கொண்டார். அதன்படி டோனி 341 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் இறுதி பதினொருவர் அணியில் இடம்பெற்று இருக்கிறார்.

முதல் விக்கெட் சாதனை

இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் களமிறங்கினர்.

உலகக் கிண்ணத் தொடரில் முதன் முதலாக தொடக்க வீரராக களமிறங்கியதால் கே.எல்.ராகுல் நிதனமாக விளையாடினார்.

மற்றொரு தொடக்க வீரரான ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி கே.எல்.ராகுலின் பதற்றத்தைத் தணித்தார். ராகுல் நிதானமாக விளையாட மறுமுனையில் ரோஹித் சர்மா அதிரடியாக ஆட அணியின் ஓட்ட எண்ணிக்கை சீராக உயர்ந்தது. பொறுப்புடன் விளையாடி ரோஹித் சர்மா – கே.எல்.ராகுல் ஜோடி 100 ஓட்டங்களைக் கடந்தனர். இதன் மூலம் உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 100 ஓட்டங்கள் கடந்த இந்திய அணியின் முதல் ஆரம்ப ஜோடி என்ற சாதனையை இவர்கள் படைத்தனர்.

இந்திய அணி 136 ஓட்டங்கள் எடுத்திருந்த போது கே.எல்.ராகுல் 57 ஒட்டங்களில் ஆட்டமிழந்தார். உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா சார்பில் பெறப்பட்ட அதிகபட்ச ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் இதுதான். இதற்கு முன்பாக 1996 இல் சச்சின் டெண்டுல்கர் – நவ்ஜோத் சிங் சித்து ஜோடி 90 ஓட்டங்கள் பெற்றதே அதிகபட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 100 ஓட்டங்களைக் கடந்த ஆரம்ப ஜோடி

175* – ஹேய்னஸ் – லாரா, 1992

147 – ஸ்மித் – ஆதர்டன், 1996

146 – வோர்னர் – பின்ச், 2019

136 – ரோஹித் சர்மா – கே.எல்.ராகுல், 2019

Tue, 06/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை