கோட்டாபயவை ஆஜராகுமாறு யாழ், நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

லலித், குகன் ஆட்கொணர்வு வழக்கு

செப்.27 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் ஆட்கொணர்வு மனு நேற்று யாழ்.நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, சாட்சியத்துக்கு அழைக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் வழக்கு விசாரணையை செப்டம்பர் 27ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷவை அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகி

சாட்சியமளிக்கும் வகையில் அவருக்கு மீளவும் அறிவித்தல் வழங்குமாறு யாழ். நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார். 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ். நகரில் நடைபெறவிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்காலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர்.

இது தொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஆட்கொணர்வு மனு 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணையின் போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றத்துக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து யாழ். நீதிவான் நீதிமன்றில் 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகின. ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித்குமார, குகன் முருகானந்தனின் மனைவி, லலித்குமார் வீரராஜின் தந்தையார் ஆகியோர் ஆரம்பத்தில் சாட்சியமளித்திருந்தனர்.தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உள்ளிட்ட சிலர் சாட்சியமளித்திருந்தனர்.

இந்த வழக்கு யாழ். நீதிமன்ற நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் நேற்று விளக்கத்துக்கு வந்தது. இதன்போது சாட்சியம் வழங்குவதற்காக அழைக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமனறத்தில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் சட்டத்தரணி அமரசிங்க ஆஜராகியிருந்தார்.

சாட்சி நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை. அவர் சிங்கப்பூர் வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை பெற்று அங்கு ஓய்வு எடுத்து வருகிறார். அதனால் அவர் இந்த நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்க தவணை ஒன்றை வழங்குமாறு அவரது சட்டத்தரணி தெரிவித்தார்.

அதனால் வழக்கு விசாரணையை செப்டம்பர் 27ஆம் திகதிவரை ஒத்திவைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

யாழ்.விசேட நிருபர்

Sat, 06/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை