மதங்களின் பெயரால் புனித பூமியை இரத்தத்தில் தோய்க்க வேண்டாம்

கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருப்பலி ஒப்புக் கொடுப்பில் பேராயர் மல்கம் ரஞ்சித்

மனிதனை நல்வழிப்படுத்துவதற்கேயன்றி மனிதர்களை அழிப்பதற்கு மதங்களை பயன்படுத்தக்கூடாதென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

மதங்களின் பெயரால் புனித பூமியை இரத்தக் கறையில் தோய்க்க வேண்டாமென கேட்டுக் கொண்ட அவர், மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு நாட்டையும் மக்களின் சக வாழ்வையும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார். ஈஸ்டர் தினத்தன்று பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி அழிவடைந்த கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் மறுசீரமைக்கப்பட்டு நேற்றுமுன்தினம் (12) வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டதுடன் நேற்று(13) புனித அந்தோனியாரின் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. காலை 10.00 மணிக்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.திருப்பலியில்

பேராயர் மறையுரை வழங்கினார். அவரது உரையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

அதிகாரப் போட்டியின் மத்தியில் அவர்களை சிலர் உபயோகித்துள்ளனர். எம்மையும் எமது கலாசாரத்தையும் எமது நாட்டையும் அவர்கள் அடிமைப்படுத்த மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட செயலாகவே இதனைப் பார்க்க முடிகிறது. எந்த ஒரு மதமும் மனிதனை அடிமைப்படுத்த முடியாது.

மனிதன் எப்போதும் சுதந்திரமானவன். அந்த சுதந்திரத்தை முழுமையாக உபயோகிப்பதற்கு மதம் வழிவகுக்க வேண்டும். மனித உயிர்களை அழிப்பதற்கு மதங்களை உபயோகப்படுத்தக் கூடாது.

ஈஸ்டர் தினத்தன்று மக்களைக் கொலை செய்த மூடர்கள் தொடர்பில் நாம் அனுதாபப்படுகிறோம். அவர்கள் உபயோகிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மதங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். மதங்கள் நாட்டைக் கட்டியெழுப்புவதில் நல்வழியில் செயற்படுவது சிறந்து. இத்தகைய புனித பூமியை இரத்தக் கறையில் மூழ்கடிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். எக்காரணத்திற்காகவும் எவரது சுயநலத்திற்காகவும் இத்தகைய சம்பவங்களை அனுமதிக்க முடியாது.

குண்டுத் தாக்குதலின் பின்னர் அமைதியாகவும் நேர்மையாகவும் கத்தோலிக்க மக்கள் செயற்படுவதற்கு அருள்புரிந்த இறைவனுக்கு நாம் நன்றி கூறவேண்டும். முஸ்லிம்கள் மீதோ அல்லது வேறு எவர் மீதோ தாக்குதல்களை நடத்த கத்தோலிக்கர்கள் கிளர்ந்தெழவில்லை. நாம் அவர்களை வழிநடத்தியது மட்டுமன்றி மக்களைப் பாதுகாத்தோம். அதுதான் ஒரு மதத்திற்கு இருக்க வேண்டிய சிறந்த இலட்சணம்.

எக்காரணத்திற்காகவும் மதங்களுக்கிடையில் பேதங்களை ஏற்படுத்துவது எமது நோக்கமல்ல. மோதல்களையல்ல சமாதானத்தையே நாம் விரும்பினோம். இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கைக்கு நிரந்தரமான அமைதி, நிரந்தரமான சமாதானம், முன்னேற்றம் அதன் மூலமே கிடைக்க முடியும். மதத்தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு நாட்டை கட்டியெழுப்புவதுடன் இனங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்த முடியும்.

புனித அந்தோனியாரின் திருவிழா தினத்தில் நாடு இழந்துள்ள அமைதியையும் சகவாழ்வையும் பெற்றுத் தருமாறு நாம் இறைவனிடம் வேண்டுவோம்.

இது தேசிய மன்றாட்டமாகட்டும். இலங்கைத் திருநாட்டிற்கு அமைதியும் சமாதானமும் கிட்ட இந்நாளில் புனித அந்தோனியாரை மன்றாடுவோம் எனவும் கருதினால் பேராயர் மெல்கம் ரஞ்சித் தனது மறையுரையில் தெரிவித்தார். இரத்தத்தில் தோய்க்க வேண்டாம்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 06/14/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக