ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்வதில் எதிரணி மௌனம் கலைக்க வேண்டும்

ஒன்றிணைந்த  எதிரணிக்கு வாசுதேவ

ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்வது தொடர்பில் ஒன்றிணைந்த எதிரணி மௌனம் காப்பது குறித்து தான் பிரமிப்படைவதாக ஜனநாயக இடதுசாரி முன்னணி செயலாளர் வாசுதேவநாணயக்கார எம்.பி. தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளராக சமல் ராஜபக்ஷவின் பெயரை தமது தரப்பு பரிந்துரை செய்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், கோத்தபாய ராஜபக்ஷவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டாலும் அது குறித்தும் ஆராயத் தயார் எனவும் தெரிவித்தார்.

பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்

கருத்துத் தெரிவித்த அவர்: எமது ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பது தொடர்பில் எந்த முன்னெடுப்பையும் காணவில்லை.வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ளன. கடந்த காலங்களில் முன்கூட்டியே பிரச்சார செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.ஆனால் வேட்பாளர் விடயத்தில் ஒன்றிணைந்த எதிரணி மௌனம் காப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஒன்றிணைந்த எதிரணிக்குள் பேச்சு நடத்தி முடிவெடுக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

ஒன்றிணைந்த எதிரணியைச் சுற்றி திரண்டிருக்கும் இலட்சக்கணக்கான மக்கள் வேட்பாளரின் பெயரை அவசரமாக வெளியிட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். மக்களின் கோரிக்கையை நாம் நிறைவேற்ற வேண்டும். ஐ.தே.கவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் செயற்பாட்டை பிற்போடுவது பெரும் தவறாகும். எமது வேட்பாளர் யாரென்பதை முடிவுசெய்வதனூடாக பல்வேறு விடயங்களை சாதிக்க முடியும். சமல் ராஜபக்ஷவின் பெயரை நாம் பரிந்துரைத்தாலும் அவர் தவிர்ந்த வேறொருவரின் பெயர் முன்மொழியப்படுமானால் அது குறித்தும் பேச்சு நடத்த தயாராகவுள்ளோம்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டங்களில் பல்வேறு விடயங்கள் ஆராயப் பட்டாலும் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில இன்னும் கவனம் செலுத்தப்படாதது ஆச்சரியமளிக்கிறது. முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், முஸ்லிம் வாக்குகள் சிதறிச் செல்வதை தடுக்கும் ஐ.தே.கவின் நோக்கமே இதன் பின்னணியில் இருக்கிறது. வகாப்வாதிகளின் வாக்குகளும் அதனோடு தொடர்புபட்டவர்களின் வாக்குகளும் பிரிந்து செல்வதை தடுப்பதே இவர்களது நோக்கமாகும். தற்பொழுது 60% மான வகாப்வாதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. வகாப்வாதிகளையும் அதனுடன் தொடர்புபட்டவர்களையும் ஒன்றாக வைத்திருக்கும் தந்திரத்தின் பின்னணியில் வேறு நோக்கமே காணப்படுகிறது. கபீர் ஹாசிம் பதவி விலகுவதற்கு வேறு காரணம் இருக்கமுடியாது. (பா)

Tue, 06/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை