ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவது யார்? யாருடன் கூட்டமைப்பது?

சு.க. எந்த முடிவையும் எடுக்கவில்லை; தேசிய அரசு என்ற பேச்சுக்ேக இடமில்லை

ஜனாதிபதித் தேர்தலில் யார் வேட்பாளராக களமிறக்கப்படுவார் அல்லது எந்தக்கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதென இன்னமும் முடிவுகள் எதனையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எட்டவில்லை. தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக களமிறக்குவது குறித்து இறுதிப்படுத்தப்பட்ட தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்று அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பு, மருதானையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க புதிய முகத்தை களமிறக்கினால் ஆதரவளிப்பேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்

கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக வெளியாகியிருந்த செய்தி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

தற்போதைய நிலையில் ஜனாதிபதித் தேர்தல் தான் முன்னதாக நடைபெறும் நிலை உருவாகியுள்ளது. தேர்தலில் என்ன நடக்குமென எதிர்வுக்கூற முடியாது. எந்த வேட்பாளரை களமிறக்குவது, எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் எவ்வித தீர்மானங்களையும் சு.க. இதுவரை எடுக்கவில்லை. தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக களமிறக்குவது குறித்தும் இறுதிப்படுத்தப்பட்ட முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனும் இன்னமும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த 71 வருடங்களாகவும், கட்சிக்காகவும், வேட்பாளருக்காகவுமே நாம் செயற்பட்டுள்ளோம். இம்முறை மக்களுக்கு சிறந்த வேலைத்திட்டத்தை முன்வைத்து செயற்படுவர்களை எதிர்பார்க்கின்றோம். சு.கவின் பொதுச் செயலாளர் கூறிய கருத்துத் தொடர்பில் அவரே எதிர்காலத்தில் பதிலளிப்பார்.

இதேவேளை, தேசிய அரசை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், அவ்வாறான செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், மீண்டும் தேசிய அரசில் இணைந்து செயற்படும் எதிர்பார்ப்பில் நாங்கள் இல்லை என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Thu, 06/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை