எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் தைரியம் எமக்கு உள்ளது

பிரதமர் ரணில்

ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்புடன் நாங்கள் முழுமையாக அழிக்கப்பட்டு வருகிறோம் என்று எமது எதிர் தரப்பினர் நினைத்தார்கள். ஆனால் எந்தவொரு சவாலையும் அல்லது பேரழிவையும் எதிர்கொள்ளக்கூடிய தைரியமும் உரிமையும் எமக்கு உள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

ஹோமாகமையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

நாட்டில் அரசாங்கமொன்று இல்லை என்று எதிர்க் கட்சியினர் கூறுகின்றனர். கடந்த 21 வருடங்களாக அவர்கள் சொல்லிக்கொள்ளும் பலமான அரசினை அவர்கள் நடத்திச் சென்றபோது சமுர்த்தி உதவி தேவைப்பட்ட குடும்பங்களுக்கு அதனை வழங்க அவர்களால் முடியவில்லை. ஆனால் சமுர்த்தி அமைச்சு பொறுப்பேற்கப்பட்ட ஒரு வருட காலத்துக்குள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 6 இலட்சத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு சமுர்த்தி பயனுதவியை வழங்க முடிந்திருக்கிறது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் கூறினார்.

2015 இல் சவாலான நாடே எமக்கு கிடைத்தது ஆனால் நாட்டை கட்டியெழுப்ப எம்மால் முடிந்துள்ளது. அபிவிருத்தியை தாங்கிக்கொள்ள முடியாத எதிர்க் கட்சியினர் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதுடன் விமர்சனமும் செய்து வருகின்றனர்.

கிராம மட்டத்தில் நாம் பாரிய அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதால் அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை சவாலுக்குட்படுத்த எதிர்க்கட்சியினரால் முடியாது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும் என்றும் பிரதமர் மேலும் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சி 1977 முதல் 1994 வரை செய்த சாதனையை விட அதிகமான அபிவிருத்தி செயற்பாடுகளை நாம் இப்போது கிராமங்களில் செய்து வருகிறோம். அதேநேரம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி அதனை வங்குரோத்து நிலையிலிருந்து காப்பாற்றியுள்ளோம். எனவே எமது கிராம மட்ட அபிவிருத்தி திட்டங்களை நாம் நிறுத்தப்போவதல்லை என்பதை உறுதியுடன் காணுகிறோம் என்று பிரதமர் அங்கு குறிப்பிட்டார்.

Thu, 06/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை