தாக்கிய பின்னரே சுனாமியை தெரிந்து கொண்டோம்; குண்டு வெடித்த பின்பே சஹ்ரானை அறிந்தோம்

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி சாட்சியம்

சஹ்ரான் பற்றி காத்தான்குடி பொலிஸாருக்குத் தெரியும். என்னுடைய காலப் பகுதியில் அவ்வாறான அடிப்படைவாத செயற்பாடுகள் பற்றி எதுவும் எனக்கு முறைப்பாடுகள் கிடைக்க வில்லை. சுனாமி வந்த பின்னரே சுனாமியைத் தெரிந்துகொண்டதைப் போலவே, தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற பின்னரே அவருடைய மோசமான தன்மையை அறிந்து கொண்டதாக காத்தான்குடி முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர தெரிவுக்குழுமுன் சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.

பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணை (18) 6ஆவது தடவையாக நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.

அவரது சாட்சியத்தின் விபரங்கள் வருமாறு,

பிரதி சபாநாயகர் கேள்வி: உங்கள் சேவைபற்றி விளக்கமளிக்கவும்?

பதில்: - 1992 முதல் 28 வருடங்கள் சேவையாற்றியுள்ளேன். மட்டக்களப்பு, பண்டாரவளை, கொழும்பு, தலைமையகம், காலி ஆகிய இடங்களிலும் பணியாற்றினேன். 2014ஆம் ஆண்டு 8ஆம் மாதம் 1ஆம் திகதி காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்குச் சென்றேன். 2017 ஆம் பிபிலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டேன்

பிரதி சபாநாயகர் கேள்வி: இக்காலப் பகுதியில் அடிப்படைவாத செயற்பாடுகள் பற்றி உங்களுக்கு அறியக்கிடைத்ததா?

பதில்: அடிப்படைவாத செயற்பாடுகள் என எந்த முறைப்பாடுகளும் செய்யப்படவில்லை. காத்தான்குடி பிரதேசத்தில் இஸ்லாமிய மதத்தில் 12 பிரிவுகள் இருந்தன. தௌஹீத் ஜமாஅத், என பல்வேறு பிரிவுகள் இருந்ததுடன், அவற்றுக்கி டையில் முரண்பாடுகள் இருந்தன.

பிரதி சபாநாயகர் கேள்வி : கிராம மட்டத்தில் எதிர்ப்புக்கள் இருந்தனவா?

பதில்: பள்ளிகளுக்கு அதனை அண்மித்த பகுதியில் உள்ளவர்களே அங்கு செல்வார்கள், அங்கு பிரச்சினை வந்தால் மதத்தை பிரசாரம் செய்யும்போதே ஏற்பட்டிருக்கும். அவை மதப் பிரிவுகளுக்கிடையிலான பிரச்சினைகள் மாத்திரமே.

பிரதி சபாநாயகர் கேள்வி : பல பிரிவுகள் இருந்தனவா?

பதில்: அந்த அந்தப் பிரிவுகளைச் சார்ந்தவர்களிடையேயே பிரச்சினைகள் ஏற்படும்.

பிரதி சபாநாயகர் கேள்வி : பாரம்பரிய முஸ்லிம்களைச் சேர்ந்த பெரியவர்கள் எதனைச் சார்ந்தவர்களாக இருந்தனர்?

பதில்: தாம் சார்ந்த பிரிவுகள் பற்றியே அவர்கள் பேசுவார்கள்.இளைஞர்கள் பெரும்பாலும் சுன்னத்துல் ஜமாஅத் பிரிவைச் சேர்ந்தவர்கள். இதில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இருக்கின்றனர்.

பிரதி சபாநாயகர் கேள்வி : பாரம்பரியமான பெரும்பான்மையானவர்கள் இருக்கின்றனர். சிங்கள மக்களுடன் இணைந்து வாழும் முஸ்லிம்கள் இருக்கின்றனர். அவ்வாறான பிரிவினரும் அங்கு இருக்கின்றார்களா?

பதில்: பாரம்பரிய முஸ்லிம்கள் பலர் இருக்கின்றனர். அண்மையில் உருவான குழுவே தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பாகும். ஏனைய சகல குழுக்களும் இவர்களுடன் எதிரானவர்கள்.

அமைச்சர் ராஜித கேள்வி: பாடசாலை அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் சஹ்ரானின் குழுவினர் வந்து கருத்துத் தெரிவித்ததால் பிரச்சினை ஏற்பட்டது. அதன் பின்னர் அப்பாடசாலை அதிபர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தாரா?

பதில்: பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பிட்ட சம்பவத்தை நினைவுபடுத்திக் கூற முடியவில்லை.

ராஜித கேள்வி: ஹிஸ்புல்லா மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலும் சஹ்ரான் செயற்பட்டுள்ளார். இச்சம்பவங்களில் சம்பந்தப்பட்ட இருவர் தற்கொலைக் குண்டுதாரிகள். இவர்களே இந்தக் கூட்டத்தை குழப்பியிருந்தனர். இவ்வாறான சம்பவங்கள் காத்தான்குடியில் இடம்பெற்றுள்ளன. இதுபற்றி பொலிஸ் தலைமையகத்துக்கு நீங்கள் தெரியப்படுத்தவில்லையா?

பதில்: அடிப்படைவாத செயற்பாடுகள் இடம்பெறுவதாக எமக்கு அறிக்கையிடவில்லை.

எம்.ஏ.சுமந்திரன் கேள்வி: சூபி குழுவினருக்கு எதிரான சம்பவம் தொடர்பிலேயே கைதுசெய்து வழக்கு தொடர்ந்தீர்கள். சம்பவம் நடக்கும்போது பொலிஸார் எங்கிருந்தார்கள்?

பதில்: பொலிஸார் அங்கிருந்தனர். நானே அங்கே சென்றிருந்தேன். அப்போது சஹ்ரான் இருந்தார். சஹ்ரானின் ஆதரவாளர்கள் அதிகமாக இருந்தனர். 100ற்கும் அதிகமானவர்கள் இருந்ததுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக்கொள்ளும் நிலைமையே காணப்பட்டது.

எம்.ஏ.சுமந்திரன் கேள்வி: ஒன்பது பேரை எப்போது கைது செய்தீர்கள்?

பதில்: அன்றும் அதன் பின்னரும் கைதுசெய்தேன். சஹ்ரானை கைது செய்யமுடியவில்லை. சம்பவம் இடம்பெற்றபோது இருவரைக் கைது செய்ததுடன், ஏனையவர்களை வீடியோக்களைப் பார்த்து கைதுசெய்தோம்.

அமைச்சர் ராஜித கேள்வி: முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படியொரு பாரியதொரு பிரச்சினை ஏற்பட்டிருக்காது என சூபி முஸ்லிம்கள் கூறுகின்றனர். இதற்கு என்ன கூறுகின்றீர்கள்?

பதில்: தொடர்ந்தும் பிரச்சினைகள் வந்தன. அவை அனைத்தும் பிரிவுகளுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினைகளே.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி: சஹ்ரானின் குழுவினர் மோசமான முறையில் செயற்பட்டார்களா?

பதில்: ஆம் அவர்களே இருதரப்புக்கும் இடையில் சண்டை நடைபெற்றபோது ஆயுதங்களுடன் இருந்தனர்.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி: 2015 தேர்தல் நடைபெற்றபோது சஹ்ரான் அப்பகுதியில் அழுத்தம் கொடுக்கும் நிலையில் இருந்தாரா?

பதில்: அப்படி பெரிதாக அழுத்தம் இருந்ததாகத் தெரியவில்லை. எனக்குத் தெரிய தேர்தல்கள் வரும்போது ஒவ்வொரு மதப்பிரிவுகளிடமும் அரசியல் கட்சிகள் சென்று அந்த பிரிவுகளுடன் கலந்துரையாடி வாக்குகளைப் பெற முயற்சிக்கும்.

எம்.ஏ.சுமந்திரன் கேள்வி: ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி அச்சுறுத்துவதாக பலர் கூறியிருந்தனர். பொலிஸாரிடம் அனுமதி பெற்று அவர் ஏனைய பிரிவினரை அச்சுறுத்துவாரா?

பதில்: போதனைகளை சஹ்ரான் முன்னெடுக்கும் போதே அவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றிருக்கலாம்.

எம்.ஏ.சுமந்திரன் கேள்வி: உங்கள் காலத்தில் பள்ளிகள் அதிகரித்தனவா?

பதில்: இல்லை, 54 பள்ளிகள் இருக்கின்றன.

ரவி கருணாநாயக்க கேள்வி: சஹ்ரான் பற்றி முறைப்பாடு செய்தபோதும் காத்தான்குடி பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லையெனக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். இதுபற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்,

பதில்: மன்னிக்க வேண்டும், சஹ்ரான் பற்றி காத்தான்குடி பொலிஸாருக்குத் தெரியும். என்னுடைய காலப் பகுதியில் அவ்வாறான அடிப்படைவாத செயற்பாடுகள் பற்றி எதுவும் முறையிடப்படவில்லை. சுனாமியைத் தெரிந்துகொண்டதைப் போலவே நாம் சம்பவம் இடம்பெற்ற பின்னரே அவருடைய மோசமான தன்மையை அறிந்துகொண்டோம்.

அமைச்சர் ராஜித சேனாரட்ண கேள்வி: உங்களுக்கு ஏதாவது அழுத்தம் இருந்ததா?

பதில்: இல்லை. நான்கு கூட்டங்களை நானே நிறுத்தியிருந்தேன்.

அமைச்சர் ராஜித சேனராட்ண கேள்வி: அப்படியான சம்பவங்கள் பற்றித் தலைமையகத்துக்கு அறிக்கையிட்டீர்களா?

பதில்: புலனாய்வு அறிக்கைகளை நாளுக்கு நாள், அனுப்புவோம். நாளுக்கு நாள் இடம்பெறும் சம்பவங்களை அனுப்பியுள்ளோம்.

ரவி கருணாநாயக்க கேள்வி - இதில் சஹ்ரானின் பெயர்களைக் குறிப்பிட்டு அனுப்பியுள்ளீர்களா ?

பதில்: ஏதாவது சம்பவங்கள் இடம்பெறும்போது அனுப்புவோம். மதப் பிரிவுகளுக்கிடையில் நடைபெற்ற குழப்பம் என்றே அறிக்கையிட்டுள்ளோம்.

ரவி கருணாநாயக்க கேள்வி: சஹ்ரானைக் கைதுசெய்ய விரும்பாமல் இருந்தீர்களா?

பதில்: இல்லை அப்படி இல்லை. அப்படியிருந்தால் நாம் இங்கு வந்து சாட்சி கூறியிருக்கமாட்டோம்.

எம்.ஏ.சுமந்திரன் கேள்வி: பொலிஸார் எதனையும் செய்யவில்லை. அவர்களுக்குப் பொலிஸாரின் ஒத்துழைப்பு இருந்தது என்று இங்கு சாட்சியளித்தவர்கள் கூறியிருந்தார்கள். அதுபற்றி என்ன கூறுகின்றீர்கள்?

பதில்: இல்லை, நான் அதனை மறுக்கின்றேன்.

ஆஷு மாரசிங்க கேள்வி : சஹ்ரான் 120 வீடுகளுக்கு தீயிட்டார் என அசாத் சாலி தனது சாட்சியத்தில் கூறியிருந்தார்?

பதில்: எனது காலப் பகுதியில் அப்படியான சம்பவம் பற்றி எதுவும் எனக்கு முறையிடப் படவில்லை.

எம்.ஏ.சுமந்திரன் கேள்வி: பயிற்சி முகாம் இருந்ததாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அது பற்றி உங்களுக்குத் தெரியுமா?

பதில்: இல்லை

எம்.ஏ.சுமந்திரன் கேள்வி: சஹ்ரானை கைது செய்யுமாறு போராட்டம் நடத்தப்பட்டிருந்தது தானே?

பதில்: 2017 மார்ச் மாதம் நடந்திருந்தது.

எம்.ஏ.சுமந்திரன் கேள்வி: இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டதாகவா உங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது?

பதில்: இல்லை எனது மூன்று வருட சேவை பூர்த்தி யானதும் இடமாற்றம் வழங்கப்பட்டது.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி: சஹ்ரானை கைதுசெய்ய சென்றபோது இடமாற்றம் வழங்கப் படவில்லையா?

பதில்: இல்லை

சரத் பொன்சேகா கேள்வி: 2014ஆம் சஹ்ரான் பற்றி எதூவது முறைப்பாடு வந்ததா

பதில் : 2014, 2015 என தொடர்ச்சியாக வந்தன.

ராஜித சோனரட்ண கேள்வி : எவ்வாறான முறைப்பாடுகள் வந்தன?

பதில்: கூட்டம் நடத்தி விமர்சனங்களை முன்வைப்பார்கள். இவர் கூட்டம் நடத்தும்போது அடுத்த தரப்பினர் வந்து கல் வீசுவார்கள் அதனையே தடுக்கவேண்டியிருந்தது.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி : ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் செயற்பாடு அடிப்படைவாதமானதா?

பதில் : இவர்களின் கருத்துக்கள் ஒன்றாகவே இருக்கும். கூட்டம் நடத்தும்போது போதைப் பொருளிலிருந்து விலகுங்கள் என்பதாகவே இருக்கும்.

எம்.ஏ.சுமந்திரன் கேள்வி : 2017 மார்ச் மாத சம்பவத்தின் பின்னர் ஒன்பது பேரா கைது செய்யப்பட்டனர்

பதில் : 9 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

சரத் பொன்சேகா கேள்வி: 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்காலத்தில் சஹ்ரான் என்ன செய்தார்?

பதில்: அது பற்றி எந்த முறைப்பாடும் தெரிவிக்கப் படவில்லை. 2000 வாக்குகளை கொண்ட சாதாரணதொரு நபரே அவர்.

மகேஸ்வரன் பிரசாத், லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 06/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை