அமைச்சர் ரிஷாட், ஆளுநர் ஹிஸ்புல்லாவை பதவி விலக்குமாறு தொடர்ந்தும் உண்ணாவிரதம்

காந்தி பூங்காவில் இரண்டாவது நாளாகவும் முன்னெடுப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆகியோரை உடன் பதவி விலக்க வேண்டுமென வலியுறுத்தி மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவில் நேற்று (02) இரண்டாவது நாளாகவும் அடையாள உண்ணாவிரதம் இடம் பெற்றது.

முற்போக்கு தமிழர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை(வெள்ளி மலை) முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமரத்தினதேரர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ஒரு இனத்துக்கு ஆதரவாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் செயற்பட்டு வருவதுடன் தமிழ் மக்களுக்கு எதிராகவும் செயற்பட்டு வருகின்றார்

தமிழ் மாணவர்களின் கல்வியை சீரழிக்கும் நோக்கில் இவர் அண்மையில் செயற்பட்டதுடன் இவரது சகல நடவடிக்கைகளும் தமிழர்களுக்கு எதிராகவே உள்ளது.

இதனால் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்,ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை, பதவி விலக்க வேண்டுமென கோருவதுடன் ஹிஸ்புல்லாஹ்வும் அமைச்சர் றிசாட் பதியுதீனும் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியே இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

நாட்டில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு நாட்டின் பாதுகாப்பு ஸ்திரப்படுத்தப்படுவதுடன் இன்னும் பயங்கரவாதிகள் இருப்பதாகவும் அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

 

Mon, 06/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை