முடிவில் மாற்றமில்லை மகாநாயக்கர்களை சந்தித்து உண்மையை விளக்குவோம்

இராஜினாமா கடிதங்கள் நேற்று கையளிப்பு

தமது பதவிகளை இராஜினாமாச் செய்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள் நாட்டின் அரசியலமைப்பிற்கிணங்க தமது இராஜினாமாக் கடிதங்களை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தனித்தனியாக அனுப்பி வைக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார்.

இதற்கிணங்க முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்பது பேரின் இராஜினாமா முடிவில் எந்தவித மாற்றமும் கிடையாது என்றும் அவர் சபையில் நேற்று தெரிவித்தார்.

அத்துடன் மகாநாயக்க தேரர்கள் விடுத்துள்ள அழைப்பு தொடர்பாக கவனம் செலுத்தும் அதேவேளை முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பற்ற நிலைமை தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் முஸ்லிம் எம்.பிக்கள் அனைவரும் கூட்டாக விரைவில் மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் எம்.பி சபையில் தெரிவித்தார்.

சபாநாயகரின் அனுமதியுடன் நேற்று பாராளுமன்றத்தில் இது தொடர்பில் விளக்கம் அளித்தபோதே ரவூப் ஹக்கீம் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;

முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பில் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு அறிவிக்காமை மற்றும்,மகா சங்கத்தினர் எம்மிடம் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் பல தகவல்கள் வெளிவருகின்றன.

இந்நிலையில் அவை தொடர்பில் சில தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

கடந்த வாரம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகள் தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பிக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் ஒன்றுக்கு வந்தனர். அது தொடர்பில் பிரதமருடனும் அமைச்சரவையில் இருக்கும் சிரேஷ்ட அமைச்சர்களுடனும் கலந்துரையாடி எமது தீர்மானத்தை அவர்களுக்கு தெளிவுபடுத்தினோம்.

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் முன்னெடுத்த உண்ணாவிரத போராட்டம் மற்றும் ஞானசார தேரர் முன்வைத்த கருத்துக்களினால் வன்முறைகள் ஏற்படக்கூடிய சூழல் எழுந்துள்ளதையும் அதனால் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர்களுக்கு தெளிவுபடுத்தினோம்.

4 அமைச்சரவை அந்தஸ்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள் ,4 இராஜாங்க அமைச்சர்கள்,ஒரு பிரதி அமைச்சர் என எமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்யப்போகின்றோம் என்பதனை அவர்களிடம் உறுதியாகத் தெரிவித்தோம்.

அதனைத் தொடர்ந்து அனைவரும் இராஜினாமாச் செய்வதாக கடந்த திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்து விட்டு எமது இராஜினாமாவை 9 பேரும் ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டு பிரதமரிடம் கையளித்தோம்.

ஆனால் அரசியலமைப்பின் பிரகாரம் இராஜினாமாக் கடிதங்களை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்க ஒவ்வொரு அமைச்சரும் தனித்தனியாக கையெழுத்திட்டு வழங்கவேண்டும் என்று மறுநாளே பிரதமர் எமக்கு அறிவித்தார்.

இதற்கிணங்க எமது நோன்புப்பெருநாள் மறுநாளில் இருந்தமையால் எமது அமைச்சர்கள் அவர்களது ஊர்களுக்கு சென்று விட்டனர். அதனால் எமது இராஜினாமாக் கடிதங்களை உடனடியாக தனித்தனியாக கையெழுத்திட்டு உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளிக்க முடியாமல் போனது.

கடந்த திங்கட்கிழமை முதல் நாங்கள் எமது அமைச்சுப் பொறுப்புக்களிலிருந்து விலகி இருக்கின்றோம். நாம் தற்போது அமைச்சர்கள் அல்ல. அதில் மாற்றமில்லை. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இன்று [நேற்று] சில அமைச்சர்கள் தனித்தனியாக கையெழுத்திட்டு தமது இராஜினாமா கடிதங்களை தந்து விட்டனர். இன்றைய தினத்துக்குள் முஸ்லிம் அமைச்சர்களின் தனித்தனியான இராஜினாமாக் கடிதங்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு விடும்.

அத்துடன் மகாநாயக்க தேரர்கள் விடுத்துள்ள எமக்கான கோரிக்கையானது அனைத்து அடிப்படைவாதிகள் மீதான தாக்குதலாகவே நாம் கருதுகின்றோம் .

முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பற்ற நிலைமை தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் முஸ்லிம் எம்பிக்கள் அனைவரும் கூட்டாக விரைவில் மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளோம்.

மகாநாயக்க தேரர்களினால் கோரிக்கை ஒன்று எம்மிடம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. அதற்காக அவர்களுக்கு நாம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இதற்கமைய அவர்களை எமது குழு விரைவில் சந்திக்கவுள்ளது.

நாட்டினதும் அனைத்து மக்களினதும் அமைதி, நல்லிணக்கத்துக்கு எமது தீர்மானங்கள் பாதிப்பாக அமைந்து விட க்கூடாது என நாம் பிரார்த்திக்கின்றோம். இதனைக் கருத்தில் கொண்டே மிக விரைவில் மகாநாயக்க தேரர்களை நாம் சந்திக்க தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, எமது அமைச்சர் ஒருவருக்கும் பதவி விலகிய எமது இரு ஆளுநர்களுக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் நாம் கவனம் செலுத்தி உள்ளோம். அது தொடர்பாக தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தால், ஏதாவது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் அதற்கான முறைப்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட முஸ்லிம் அமைச்சர் மற்றும் இரு ஆளுநர்கள் மீதும் உடனடியாக விசாரணைகளை நடத்தி தீர்ப்பொன்றை விரைவில் வழங்க வேண்டுமென்பதே எமது கோரிக்கை என்றும் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார் .

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்

Fri, 06/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை