குற்றச்சாட்டுகள் விரைவாக விசாரணை செய்யப்பட வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம்

நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்களையடுத்து முன்னாள் முஸ்லிம் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் மற்றும் முன்னாள் ஆளுனர்கள் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, அசாத்சாலி ஆகியோர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விரைவாக விசாரணை செய்ய வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்தார்.

ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் செயற்திட்டத்திற்கமைய உலக வங்கியின் நிதி உதவியுடன் ஒலுவில் பிரதேச வைத்தியசாலை 03 கோடி 60 இலட்சம் ரூபாய் நிதியில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கான சுகாதார சேவை நிலைய புதிய கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று (09) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட்டு எங்களது நிலைப்பாட்டினை சகல அரசியல் கட்சிகளுக்கும் தெரிவித்து வருகின்றோம். எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்வரும் 12ம் திகதிக்கு முன்னர் விசாரணை செய்வதற்கு காலக்கேடு விதித்துள்ளோம்.

முஸ்லிம்கள் நிம்மதியாக இந் நாட்டில் வாழுவதற்கு பெரும்பான்மை சமூகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இலங்கையில் 75 சதவீதமான மக்கள் தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக வங்கியின் நிதி உதவியில் இலங்கையில் தொற்றா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இவ் வேலைத்திட்டத்திற்கு இவ் வைத்தியசாலையும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இச் செயற்த்திட்டத்தின் ஊடாக வைத்தியசாலையில் நீண்டகாலமாக நிலவுகின்ற பௌதீக வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதோடு வைத்திய ஆய்வு கூடம், கதிர் இயக்கப் பிரிவு மற்றும் அதனுடன் இணைந்ததாக மேலும் பல வைத்திய வசதிகள் இவ் வைத்தியசாலைக்கு வழங்கப்படும்.

இலங்கையில் உலக வங்கியின் நிதி உதவியுடன் ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் செயற்திட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் 50 வைத்தியசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் ஒலுவில் பிரதேச வைத்தியசாலை மற்றும் மத்தியமுகாம் மாவட்ட வைத்தியசாலை என்பன தெரிவு செய்யப்பட்டுள்ளதென்றார்.

ஒலுவில் விசேட,

அம்பாறை சுழற்சி நிருபர்கள்

 

Mon, 06/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை