சமுர்த்தி நிகழ்வுக்கு வருகை தந்த அமைச்சருக்கு எதிராக போராட்டம்

காணாமல்போன உறவுகளால்;

வவுனியாவிற்கு சமுர்த்தி உரித்து பத்திரம் வழங்குவதற்கு வருகைதந்த அமைச்சர் தயா கமகேக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரியும் காணாமல் ​போனோரது உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்றைய தினம் மாலை வவுனியா நகரசபை மைதானத்தில் சமுர்த்தி பயனாளிகளுக்கு உரித்துபத்திரம் வழங்குவதற்காக அமைச்சர் தயாகமகே வருகைதந்திருந்தார்.

இதன்போது தொடர்ச்சியாக வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் போனோரது உறவுகள் அமைச்சரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

4.40மணியளவில் வன்னி விமானப்படைத்தளத்திற்கு சொந்தமான சொப்பர் விமானத்தில் வந்திறங்கிய அமைச்சர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் காரணமாக கண்டி வீதி வழியாக செல்லாமல் பிரதான மணிக்கூட்டு வீதி வழியாக பசார் வீதி சென்று இலுப்பையடி, வைத்தியசாலைச் சுற்றுவட்டம் ஊடாக நகரசபை மைதானத்தினை வந்தடைந்தார்.

தமது பிள்ளைகளின் விடுதலைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்காமல் தமக்கு வாய்க்கு அரசி போடவருகின்றாய் என்று கோசமெழுப்பியவாறு தமது போராட்டத்தினை மேற்கொண்டனர். வீதியை வழிமறிக்கச் சென்ற உறவுகளின் போராட்டத்தினை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுற்றி பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர். முன்னோக்கிச் சென்ற உறவுகளின் போராட்டத்தினை தடுத்து நிறுத்திய பொலிஸார் போராட்டம் மேற்கொண்ட உறவுகளுடன் வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மஹிந்த வில்லுவராட்சி போராட்டத்தின் காரணத்தை வினவினார். இதன்போது ஜனாதிபதியுடன் நிற்கும் தமது பிள்ளைகளையும் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கும் தீர்வு எங்கே என்று கோசமெழுப்பினார்கள்.

எனினும் நேற்றைய தினம் சமுர்த்தி நிகழ்வு திட்டமிடப்பட்டவாறு எளிமையான முறையில் இடம்பெற்றது.

வவுனியா விசேட நிருபர்

Mon, 06/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை