ச.தொ.ச வாகனங்கள் எந்த ஒரு பயங்கரவாத செயற்பாட்டுக்கும் பயன்படுத்தப்படவில்லை

ச.தொ.ச வாகனங்கள் எந்த ஒரு பயங்கரவாத செயற்பாட்டிற்கும் பயன்படுத்தப்படவில்லை. இது தொடர்பில் அமைச்சினூடாக முழு விசாரணை நடத்தியதாக வர்த்தக வாணிபத்துறை அமைச்சின் செயலாளர் நீல் ரஞ்சித் அசோக்க தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் விசேட பாராளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளித்த அவர் மேலும் கூறியதாவது,

இப்ராஹீமின் கொலேசஸ் கம்பனி தொடர்பில் பயங்கரவாத குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து அந்த கம்பனி குறித்து மேலதிக செயலாளர்

ஊடாக விசாரணை நடத்தினேன். இந்த கம்பனிக்கு மூலப்பொருட்கள் வழங்குமாறு அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஒருபோதும் அழுத்தம் வழங்கியது கிடையாது.

இப்ராஹிமின் கம்பனிக்கு சில அரசியல்வாதிகள் கடிதம் வழங்கிய போதும் எம்மிடம் போதியளவு கழிவு இரும்புகள் கிடையாது.இங்கு வெடிபொருட்கள் தயாரிக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்துமாறு பாதுகாப்பு அமைச்சிடம் கோரியுள்ள போதும் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை.

இப்ராஹிம் வறிய நிலையிலிருந்து இந்த நிலைக்கு உயர்ந்தவர்.அவர் தொடர்பில் பயங்கரவாத குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டாலும் அவருக்கு பயங்கரவாத தொடர்பு இருக்கும் என நம்ப முடியாதுள்ளது. இப்ராஹிமுக்கு உதவுமாறு அமைச்சர் ஒரு போதும் கோரியது கிடையாது.

ச.தொ.ச வாகனங்களுக்களிலிருக்கும் ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தை கொண்டு அவை பயங்கரவாத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பது பற்றி விசாரணை நடத்தினோம்.

அவை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப் படவில்லை. குறிப்பிட்ட தினம் குறிப்பிட்ட இடத்திற்கு அவை பயணம் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிசாந்தன்

Thu, 06/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை