‘பலஸ்தீனர் தங்களை ஆள இன்னும் தயாராகவில்லை’

ஜரெட் குஷ்னர்

பலஸ்தீனர் இன்னும் தங்களை ஆள்வதற்கு தயாராகவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மருமகனும் ஆலோசகருமான ஜரெட் குஷ்னர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன அமைதித் திட்டம் ஒன்றை வெளியிட அமெரிக்கா திட்டமிட்டிருக்கும் நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எச்.பி.ஓ தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த அவரிடம் இஸ்ரேலின் தலையீடு இன்றி பலஸ்தீனர்களுக்கு ஆட்சி புரிய திறன் உள்ளதா என்று கேட்கப்பட்டதற்கு, “அதனையே நாம் பார்க்கவேண்டி உள்ளது. எதிர்காலத்தில் ஆட்சிபுரிவதற்கு அவர்களால் முடியுமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.

பலஸ்தீனர்கள் நியாயமான நீதி முறை, கருத்துச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், அனைத்து மதங்கள் மீதான சகிப்புத் தன்மை கொண்டிருக்க வேண்டி இருப்பதாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் மத்திய கிழக்கு அமைதி முயற்சியின் கட்டமைப்பாளராக குஷ்னர் பார்க்கப்படுகிறார்.

எனினும் டிம்பின் இராஜதந்திர முயற்சிகளை பலஸ்தீன தலைமைகள் புறக்கணித்திருப்பதோடு குஷ்னர் முன்னெடுத்துவரும் அமைதி முயற்சி இஸ்ரேல் சார்புடையது என்று பலஸ்தீனர் மற்றும் அரபு தலைமைகள் சந்தேகிக்கின்றன.

இந்த அமைதித் திட்டத்தின் ஒரு பகுதி பஹ்ரைனில் இந்த மாதம் இடம்பெறவுள்ள அமெரிக்கா அனுசரணையிலான முதலீட்டாளர்களின் மாநாட்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதில்லை என்று பலஸ்தீன நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இஸ்ரேலில் மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த அமைதித் திட்டத்தை வெளியிடுவதில் மேலும் தாமதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு கூட்டணி அரசொன்றை அமைப்பதில் தோல்வி அடைந்த நிலையில் செப்டெம்பர் 17 ஆம் திகதி மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளது.

Tue, 06/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை