சிரியாவின் துருக்கி ஆதரவு பகுதியில் கார் குண்டு தாக்குதல்: 17 பேர் பலி

வட மேற்கு சிரியாவின் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு நகரின் பரபரப்பான சந்தை மற்றும் பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கார் குண்டு தாக்குதல் ஒன்றில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

அலப்போ மாகாணத்தின் துருக்கி ஆதரவு போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள அஸாஸில் இடம்பெற்ற இந்த வெடிப்பில் உயிரிழந்தவர்களில் நான்கு சிறுவர்கள் அடங்குகின்றனர்.

இந்தத் தாக்குதலில் மேலும் 20 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

“மாலை நேர தொழுகைக்குப் பின் பலரும் கலைந்து செல்லும்போது இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது” என்று மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகத்தின் தலைவர் ரமி அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

அருகில் இருக்கும் சந்தைப் பகுதியில் எதிர்வரும் நோன்புப் பெருநாளுக்காக ஆடைகள் வாங்க மக்கள் திரண்டிருந்துள்ளனர்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவ உதவிகள் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் யார் இருப்பது என்பது உறுதி செய்யப்படவில்லை. வட கிழக்கு ரக்காவில் ஒரு தினத்திற்கு முன் இடம்பெற்ற இதேபோன்ற குண்டு தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டு மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

2016 ஆம் ஆண்டு சிரியாவில் துருக்கி ஆரம்பித்த யுத்த நடவடிக்கை மூலம் அஸாஸ் உட்பட வடக்கு சிரியாவின் 2,000 சதுர கி.மீ பகுதியை கைப்பற்றி அங்கிருந்து இஸ்லாமிய அரசு ஜிஹாதிக்களை வெளியேற்றியது. இதன்மூலம் அந்த பகுதிக்கு குர்திஷ்கள் முன்னேறுவதை துருக்கி தடுத்தது.

இந்தப் பகுதியில் துருக்கி துருப்புகள் மற்றும் உளவுப் படையினர் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

Tue, 06/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை