மைலோ வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டம்: பேருவளை கோல்டன் கேட் சர்வதேச பாடசாலை அணி சம்பியன்

பேருவளை விஷேட நிருபர்.

ஸ்ரீ லங்கா பாடசாலை உதைபந்தாட்ட சங்கம் மைலோ வெற்றிக்கிண்ணத்திற்காக நடாத்திவரும் 12 வயதிற்கு கீழ்ப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் களுத்துறை மாவட்டத்தில் சம்பியனாக பேருவளை கோல்டன் கேட் சர்வதேசப் பாடசாலை தெரிவாகியுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு இடையே தொடர்ந்து சுற்றுப் போட்டி இடம்பெற்றதோடு இறுதிப் போட்டி களுத்துறை பேர்னண் பெர்னாந்து விளையாட்டரங்கில் கடந்த 16 ம் திகதி மாலை பேருவளை கோல்டன் கேட் சர்வதேச பாடசாலைக்கும் களுத்துறை கொலிகுரோஸ் பாடசாலைக்கும் இடையே நடைபெற்றது.

போட்டி ஆரம்பம் முதல் இறுதிவரை இரண்டு அணி வீரர்களும் திறமையாக விளையாடி தமது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க கடும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் இரு அணிகளும் 1-–1 என்ற கோல் வீதத்தில் பெற்றுக் கொண்டதை அடுத்து பெனல்டி முறை வைக்கப்பட்டது. இதன் போது பேருவளை கோல்டன் கேட் 2-–1 என்ற கோல் வீதத்தில் வெற்றிபெற்றது. களுத்துறை மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட சுற்றுப் போட்டியொன்றில் மாவட்ட சம்பியனாக சர்வதேச பாடசாலையொன்று தெரிவாகியமை இதுவே முதல் தடவையாகும் என கோல்டன் கேட் சர்வதேச பாடசாலையின் தலைவர் எம் ஹஸன் பாஸி தெரிவித்தார்.

இப்போட்டிக்கு எஸ்.கே ஜயவீர நடுவராக கடமையாற்றினார். இப்போட்டியை கண்டுகளிக்க பெறுமளவிலான விளையாட்டு ரசிகர்கள் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

களுத்துறை மாவட்டத்தில் சம்பியனாக தெரிவாகிய கோல்டன் கேட் சர்வதேச பாடசாலை 12 வயதுக்கு கீழ் உதைப்பந்தாட்ட அணிவீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு 17ம் திகதி பாடசாலையில் நடைபெற்றது. பாடசாலை பணிப்பாளர் ஹஸீன் ஹஸன் தலைமையில் நடைபெற்றதோடு பாடசாலை அதிபர்,பாடசாலை தலைவர் ஹஸன் பாஸி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Wed, 06/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை