எம்.பிக்கள் குறைந்தது 5 மணிநேரமாவது பாராளுமன்றினுள் இருப்பது கட்டாயம்

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் ஆகக் குறைந்தது 5 மணி நேரமாவது சபையிலிருப்பது கட்டாயம் என்பது சட்டமாக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இது தொடர்பில் பாராளுமன்றம் உரிய கவனம் செலுத்துவது அவசியமென்றும் அவர் பிரதி சபாநாயகரிடம் கோரிக்கைவிடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும்போதே இக்கோரிக்கையை முன்வைத்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பான விவாதத்தில் மூன்று அமைச்சர்கள் மாத்திரமே கலந்துகொண்டிருந்தனர். ஆளும் கட்சியில் மிகவும் குறைவானவர்களே கலந்துகொண்டிருந்தனர்.

இவர்கள் வந்திருக்காவிட்டால் அவசரகாலச் சட்டத்தை நீடிக்க முடியாது போயிருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நிலைமைகளைத் தடுப்பதாயின் பாராளுமன்ற அமர்வொன்றில் கலந்துகொள்ளும் உறுப்பினருக்கு 2,500 ரூபா வழங்கப்படவேண்டுமாயின் அந்த பாராளுமன்ற உறுப்பினர் ஆகக் குறைந்தது 5 மணி நேரமாவது சபையில் இருக்க வேண்டும் என்ற விடயம் கட்டாயமாக்கப்பட வேண்டும். இது தொடர்பான சட்டத்தைக் கொண்டுவருவதற்கு பாராளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பான விவாதம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

இதில் ஆளும் கட்சி உறுப்பினர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தமை பல சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சியினரால் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததுடன், ஒரு சந்தர்ப்பத்தில் கோரம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. எதுவாக இருந்தாலும் இறுதியில் அவசரகாலச் சட்டத்தை நிறைவேற்றியிருப்பதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல சுட்டிக்காட்டினார்.

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்

 

Sat, 06/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை