பிரதமர் மோடி 4 மணி நேரமே இலங்கையில்

ஜனாதிபதி,பிரதமருடன் பேச்சுவார்த்தை

எதிர்க்கட்சித் தலைவர், சம்பந்தனை சந்திக்க ஏற்பாடு

நாளை மறுதினம் இலங்கை வரவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை காலை 11மணிக்கு வந்தடையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அன்றையதினமே மாலை 3மணியளவில் மீண்டும் இந்தியா நோக்கிச் செல்லவுள்ளார். பிரதமர் மோடியை இலங்கைப் பிரதமர் ரணில் விக்கரமசிங்க நேரில் சென்று வரவேற்கவுள்ளார். இதன்போது இருநாட்டு பிரதமர்களுக்கும் இடையிலான இருதரப்புச் சந்திப்பு விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படுமென தெரியவருகிறது.

சுமார் மூன்று மணித்தியாலங்கள் மட்டுமே இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியப் பிரதமர் மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்காக ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரியொருவர் கூறினார்.

பிரதமர் மோடியை வரவேற்பதற்காக ஜனாதிபதி மாளிகையில் செங்கம்பள வரவேற்புடன் கூடிய விசேட வரவேற்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இச்சந்திப்பைத் தொடர்ந்து இந்திய இல்லத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடியை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் , பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தனும் சந்திக்க விருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

இச்சந்திப்புகளின் போது அரசியல், பொருளாதாரம் எதிர்வரும் தேர்தல் என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவிலிருந்து நாளை (8) மாலைதீவு செல்லும் பிரதமர் மோடி நாளை மறுதினம் (9) மாலைதீவிலிருந்து இந்தியா நோக்கிச் செல்லும் வழியிலேயே இலங்கைக்கு மூன்று மணித்தியால விஜயம் மேற்கொள்ளவுள்ளார். தனது பயணத்தை முடித்துக்கொண்டு விமான நிலையம் திரும்பும் பிரதமர் மோடியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விமான நிலையம் சென்று வழியனுப்பி வைப்பார்.

பிரதமர் மோடியின் வருகையையடுத்து சில மணித்தியாலங்களுக்கு கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கொழும்பின் சில பகுதிகளிலும் தற்காலிக வீதி தடைகள் ஏற்படுத்தப்படுமென்றும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் பொலிஸ் தலைமையகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

லக்ஷ்மி பரசுராமன்

Fri, 06/07/2019 - 07:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை