அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு மேலும் 2,500 ரூபாவால் அதிகரிப்பு

அரசாங்கம் கடந்த ஐந்து வருட காலத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் தற்போது அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவான 7,800 ரூபாவுக்கு மேலதிகமாக மேலும் 2,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமென நிதி அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிதி அமைச்சராக தான் நியமிக்கப்பட்ட பின்னர் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், நாட்டில் ஏற்பட்ட வரட்சி, வெள்ளம், ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி போன்றவற்றிலிருந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்பி வரும் நிலையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலை எதிர்கொள்ள நேர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார.

அரசாங்கம் தொடர்பில் எவர் எத்தகைய அவதூறுகளை முன்வைத்தாலும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முறையான திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தனிநபர் வருமானம் தேசிய உற்பத்தி சகல துறைக்குமான அபிவிருத்தி ஆகியவற்றோடு இந்த வருடத்தின் கடந்த கால் நூற்றாண்டில் ஒன்று தசம் 8 வீதமாக பொருளாதார அபிவிருத்தி காணப்படுவதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று 918) நிதியமைச்சு தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே நிதி அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்: கடந்த சில வருடங்களாக நிலையான பொருளாதார ஸ்திரத்தன்மையை எம்மால் தக்கவைத்துக்கொள்ள முடிந்துள்ளது தனிப்பட்ட வருமானம் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் தனிப்பட்ட லாபங்களை கருதி செயற்படாமையே இந்த வெற்றிக்கு காரணமாகும்.

அத்துடன் ஊழல் மோசடிகள் இன்றி தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தும் வேலைத் திட்டங்களை மேற்கொண்டமையும் இதற்கு முக்கிய காரணமாகும்.நாடு பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றுக்கு முகங்கொடுத்துள்ள நிலையிலும் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திர நிலையில் தக்க வைத்துக்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தனிநபர் வருமானம் வேலையில்லாப் பிரச்சினை மற்றும் தேசிய உற்பத்தி ஆகியவை மீது அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றது. பல்வேறு சர்வதேச நாடுகள் மற்றும் நிறுவனங்கள் எமக்கு உதவி ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றன.

இந்நிலையில் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான முதலீட்டு வங்கி ஆகியன நாட்டின் அபிவிருத்திக்காக நிதி உதவிகளை வழங்கி வருகின்றன.

இந்த வகையில் கடந்த சில மாதங்களில் 1,200 மில்லியன் அமெரிக்க டொலர் எமக்கு சர்வதேச நிதி உதவியாகக் கிடைத்துள்ளன.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பதாக உலக வங்கி கிராமிய அபிவிருத்தி திட்டத்திற்கான 70 மில்லியன் டொலரை கடனுதவியாக வழங்கியுள்ளது. அதற்கு மேலதிகமாக 152 மில்லியன் அமெரிக்க டொலரை அபிவிருத்தித் திட்டங்களுக்காக வழங்கியுள்ளது. கடந்த மே மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் 164 மில்லியனையும் ஐக்கிய அமெரிக்காவின் மிலேனியம் சேலஞ்ச் நிதியம் 480 மில்லியன் அமெரிக்க டொலரையும் ஆசிய அபிவிருத்தி வங்கி 50 மில்லியன் அமெரிக்க டொலரையும் வழங்கியுள்ளன.

ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியானது கொழும்பு நகர புனரமைப்பு மற்றும் வரட்சி நிலையை நிவர்த்திக்கும் வகையில் என்பது மில்லியன் டொலரை வழங்க உள்ளதுடன் அந்த வங்கியானது நெடுஞ்சாலைகள் அபிவிருத்திக்காக 1,000 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உத்தேசித்துள்ளது.அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இத்தகைய நிதி உதவிகள் தனிப்பட்ட நட்புக்காக அன்றி நாட்டின் தேசிய பொருளாதார கொள்கையின் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் பேரிலேயே வழங்கப்பட்டுள்ளன.

அரசாங்கம் நாட்டின் அபிவிருத்தி மக்களின் வாழ்வாதாரம் தொழில் முயற்சிகள் ஏற்றுமதி துறை கல்வி சுகாதாரம் நலன்புரி திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் மேம்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

அரசாங்கத்தின் முக்கிய அபிவிருத்தி செயற்திட்டமான ‘கம்பெரலிய’ வேலைத் திட்டத்தின் மூலம் அரசாங்கம் 48,000 மில்லியன் ரூபாவை நாடளாவிய அபிவிருத்தித் திட்டங்களுக்காக செலவிட்டு வருகிறது. இந்த வருடத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் 98 ஆயிரத்து 600 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன.

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்

Wed, 06/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை