ஹலீம், கபீர் அமைச்சு பொறுப்பேற்க முஸ்லிம் கூட்டுத்தலைமை அனுமதி

அரசின் உத்தரவாதம் உறுதியானதும் ஏனையவர்களும் பரிசீலனை

எம்.ஏ.எம்.நிலாம்

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.ஏ.ஹலீம், கபீர் ஹாசிம் ஆகியோர் மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்பதற்கு முஸ்லிம் கூட்டுத்தலைமை நேற்று (18) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சிரேஷ்ட தலைவரான முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் தலைமையில் நேற்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இதற்கான இணக்கம் ஏற்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் தத்தம் கட்சித் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்பது பற்றித் தீர்மானிக்க முடியும் என்றும் அதேநேரம் தேசிய கட்சியின் (ஐ.தே.மு) உறுப்பினர்களான மேற்குறிப்பிட்ட இருவரும் தமது தலைவரைச் சந்தித்துப் பொறுப்புகளை மீள ஏற்பதுபற்றிய முடிவினை எடுப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சுமார் மூன்று மணித்தியாலம் நடைபெற்ற நேற்றைய சந்திப்பின்போது மூன்று தரப்பினரும் தத்தம் நிலைப்பாட்டினை விபரித்துள்ளனர். அதேநேரம், அரசாங்கம் தமக்கு வழங்கியுள்ள உத்தரவாதத்தை உறுதிப்படுத்தும் பட்சத்தில் ஏனையவர்களும் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்பது பற்றிப் பரிசீலிக்க முடியும் என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக முஸ்லிம் கூட்டுத் தலைமை வட்டாரங்கள் தினகரனுக்குத் தெரிவித்தன.

இந்நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடம் கூடிப் பேசி முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்பு காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. அதுபற்றிய விபரம்

இன்று வெளியிடப்படலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கூட்டம் அதன் தலைவர் றிஷாத் பதியுதீன் தலைமையில் நாளை வியாழக்கிழமை நடைபெறுகிறது. அதன் முடிவுகளும் சாதகமாக இருக்கும் என்று அதன் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீன் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், கண்டியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். அதனையடுத்து பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர், இவர்கள் குறித்து நடவடிக்ைக எடுப்பதற்கு அரசாங்கத்திற்குக் கடந்த 03ஆந்திகதி நண்பகல்வரை காலக்கெடு விதித்திருந்தார். அன்றைய தினம் நண்பகல் வரையும் அரசாங்கம் தீர்மானம் எதுவும் எடுக்காத நிலையில், அவர்கள் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிய பேரணியொன்றை ஆரம்பித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இரண்டு ஆளுநர்களும் தமது பதவி இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.அதன் பின்னர் ரத்தன தேரர் போராட்டத்தைக் கைவிட்டார்.

அவ்வாறான சூழ்நிலையில், அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்பதுபேரும் சிரேஷ்ட தலைவர் ஏ.எச்.எம்.பௌசியின் இல்லத்தின் ஒன்றுகூடி நிலைவரத்தை ஆராய்ந்தனர். அந்தச் சந்திப்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டு, முஸ்லிம் சமூகத்தின் நலன் கருதி தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்ெகாண்டனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா செய்யப்போகும் முடிவினை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Wed, 06/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை