'1990 - சுவசெரிய' இன்று முதல் இலங்கை முழுவதும் சேவையில்

'1990 - சுவசெரிய' இன்று முதல் இலங்கை முழுவதும் சேவையில்-1990-Suwa Seriya Ambulance-Now Covers the Entire Nation

சுவசெரிய ஆரம்பகர்த்தா கலாநிதி ஹர் டி சில்வா, சுவசெரிய குழுவுக்கு பாராட்டு

  • 2016 ஜூலையில ஆரம்பம்
  • 1,133,344 அழைப்புகள்; 219,371 தடவைகள் அம்பியூலன்ஸ் அனுப்பி வைப்பு
  • 12.58 நிமிடத்தில் நோயாளரை அணுகல்
  • 198,223 நோயாளர்கள் பயனடைவு; 89 குழந்தைகள் பிறப்பு
  • 1,428 இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு
  • '1990 - Ambulance' செயலி
  • இந்திய அரசினால் 22.5 மில்லியன் அமெ. டொலர் நன்கொடை

1990 சுவசெரிய சுகப்படுத்தும் அம்பியூலன்ஸ் சேவையானது இன்று (23) முதல், முழு இலங்கையிலும் தமது சேவையினை விரிவுபடுத்திய வரலாற்று முக்கியத்துவமிக்க அடைவை அம்பாறை நகரில் அடைந்தது.

இலங்கையில் வைத்தியசாலைக்கு முன்னதான அவசர சிகிச்சை சேவையினை ஓர் புரட்சிகரமான பாதையை நோக்கி கொண்டு சென்ற 1990 சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவை இன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பித்ததை அடுத்து, தமது சேவையினை முழு இலங்கைக்கும் விரிவுபடுத்தும் இலக்கை 1990 சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவை அடைந்துள்ளது.

'1990 - சுவசெரிய' இன்று முதல் இலங்கை முழுவதும் சேவையில்-1990-Suwa Seriya Ambulance-Now Covers the Entire Nation

இன்று (23) காலை, 1990 சுவசெரிய, அதன் கர்த்தாவான பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வழங்கல் அமைச்சர் கலாநிதி ஹர் டி சில்வாவின் தலைமையில்
அம்பாறை நகரில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே, பெற்றோலிய வள அபிவிருத்தி பிரதியமைச்சர் அனோமா கமகே உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1990 சுவசெரிய சேவையானது முதன் முதலில் 2016ம் ஆண்டு ஜுலை மாதம் தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்டதுடன், தொடர்ந்து ஏனைய மாகாணங்களிலும் அதன் சேவை கட்டம் கட்டமாக விரிவுபடுத்தப்பட்டது.

27 அம்பியூலன்ஸ் வண்டிகள் இன்றைய தினம் கிழக்கு மாகாணத்தினை மையப்படுத்திய அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தமது சேவையை ஆரம்பித்துள்ளன.

அதற்கமைய, இந்த சேவையானது முழு இலங்கையிலும் தமது சேவையினை வழங்க ஆரம்பித்துள்ளதுடன், நாடு பூராகவும் 1990 சுவசெரிய அம்பியூலன்ஸ் வண்டிகள் 297 சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

'1990 - சுவசெரிய' இன்று முதல் இலங்கை முழுவதும் சேவையில்-1990-Suwa Seriya Ambulance-Now Covers the Entire Nation

இதுவரை இச்சேவைக்கு வந்த 1,133,344 தொலைப்பேசி அழைப்புகளுக்கு உடனடியாக பதிலளித்து, 219,371 தடவைகள் அம்பியூலன்ஸ் வண்டிகளை அவ்விடத்துக்கு அனுப்பப்பட்டு, 12.58 நிமிடம் எனும் சொற்ப நேரத்தினுள் நோயாளரை அணுகியதுடன், அவசர சிகிச்சை தேவைப்பட்ட 198,223 நோயாளர்களை வைத்தியசாலைகளுக்கும் அழைத்துச் சென்றுள்ளது.

மேலும், இந்த அம்பியூலன்ஸ் வண்டிகளில் இதுவரை 89 குழந்தைகள் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1990 சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவையினை முழு இலங்கையிலும் விரிவுபடுத்திய இவ்வரலாற்று முக்கியத்துவமிக்க சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்ட அதன் ஆரம்ப கர்த்தா, பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வழங்கல்கள் அமைச்சர் கலாநிதி ஹர் டி சில்வா,

“உண்மையில் சுவசெரிய குழுமமாக இன்று எமக்கு மிக முக்கியத்துவமிக்க நாளாகும். பல சவால்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட பயணத்தின் பயண முடிவெல்லையினை இன்று நாம் வந்தடைந்துள்ளோம். இந்த சேவையானது இன்று இந்த நிலையினை அடைவதற்கு எமது சுவசெரிய குழுவின் அர்ப்பணிப்பே காரணமாகும். அவர்கள் தமது தொழிலுக்கும் மேலாக, இதனை ஒரு தேசிய சேவையொன்றாக நினைத்தே சுவசெரியவிற்காக பணிபுரிந்து வருகின்றனர். இந்த சேவையின் தலைவனாக நான் அவர்கள் பெற்றுக் கொடுக்கும் சேவை தொடர்பில் பெருமையடைகின்றேன். எதிர்காலத்தில் இந்த சேவையினை எமது நாட்டு மக்களின் உயிரினை காப்பாற்றுவதற்காக மென்மேலும் விருத்தி செய்து முன்னோக்கி எடுத்துச் செல்வேன்.”

வருடத்தின் 365 நாட்களும் இரவு - பகல் பாராது, எவ்வித கட்டணமும் அறவிடாது, இலவசமாக சேவையினை வழங்குகின்ற 1990 சுவசெரிய சேவையானது அண்மையில் புதிய அவசர செயற்பாட்டு மேலாண்மை பிரிவினையும் (Emergency Dispatch Management System –EDM) விசேட 1990 கையடக்கத் தொலைப்பேசி செயலி (App) சேவையொன்றினையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இச்சேவையினை இலங்கை முழுவதும் ஆரம்பிப்பதற்காக வேண்டி இந்திய அரசாங்கத்தினால் மீள செலுத்தாத நன்கொடையாக 22.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டதுடன், 2018ம் ஆண்டு பாராளுமன்ற சட்டத்தின் மூலம் சுவசெரிய மன்றம் ஆரம்பிக்கப்பட்டு, இச்சேவையானது இந்நாட்டு அரசாங்கத்துடன் முழுமையாக இணைந்த சேவையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முழுமையாக அரசாங்கத்துக்குரிய சுவசெரிய மன்றமானது பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வழங்கல்கள் அமைச்சின் கீழ் தற்போது இயங்கி வருகின்றது. சுவசெரிய மன்றத்துக்கான பிரதிநிதிகள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது குறித்த மன்றத்தில் 1,428 இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்புக்களை பெற்று பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sun, 06/23/2019 - 15:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை