ணீyஜீ rhஹீiனீ லீpiy லீhl;ba னிkw;ஜீpலீ;ஹீpa tஜிuu;ஜீs;

சீau;yhலீ;நி சீzpஜீ;பி vஹீpuhனீ ணிl;lஹீ;ஹீpy;

அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர்களான ஜோன் கேம்ப்பெல் மற்றும் ஷாய் ஹோப் ஜோடி முதல் விக்கெட்டுக்காக 365 ஓட்டங்களைக் குவித்து உலக சாதனை நிலைநாட்டியுள்ளனர்.

அயர்லாந்து, பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றுமுன்தினம் (05) டப்ளினில் ஆரம்பமாகியது.

முதல் போட்டியில் அயர்லாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர்களாக ஜோன் கேம்ப்பெல் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் களமிறங்கினர். போட்டியின் ஆரம்பம் முதல் இருவரும் அயர்லாந்து பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.

சிறப்பாக விளையாடி இருவரும் முதலில் அடுத்தடுத்து அரைச் சதம் அடித்தனர். இதனால் ஓட்ட எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்தது. 35ஆவது ஓவரின் 5ஆவது பந்தை பௌண்டரிக்கு விரட்டி ஷாய் ஹோப் தனது ஐந்தாவது ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்தார். மறுமுனையில் விளையாடிய ஜோன் கேம்ப்பெல் 36ஆவது ஓவரின் முதல் பந்தில் ஒரு ஓட்டத்தைப் பெற்று தனது முதலாவது ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த முதல் மேற்கிந்திய தீவுகள் தொடக்க ஜோடி என்ற பெருமையை இவ்விருவரும் பெற்றனர்.

சதம் அடித்த பின்னர் இருவரும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 150 ஒட்டங்களையும் கடந்தனர். எனினும், 47.2 ஆவது ஓவரில் 365 ஓட்டங்களை குவித்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. மெக்கார்தி, தான் வீசிய ஓவரில் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தார்.

99 பந்துகளை எதிர்கொண்டு சதம் அடித்த ஜோன் கேம்ப்பெல் 137 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 15 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 179 ஓட்டங்களைக் குவித்தார். மறுபுறத்தில் 112 பந்துகளில் சதம் அடித்த ஹோப் 152 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 22 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 170 ஓட்டங்களைக் குவித்தார்.

இந்த சிறந்த இணைப்பினால், 48 வருடகால ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் விக்கெட்டுக்காக அதிக ஓட்டங்களைக் குவித்த ஜோடி என்ற பெருமையை இருவரும் பெற்றுக் கொண்டனர். இதற்கு முன்பு பாகிஸ்தானின் இமாம் உல்–ஹக், பக்கர் சமான் ஜோடி கடந்த வருடம் சிம்பாப்வேக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 304 ஓட்டங்களை எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அச்சாதனை தற்பொழுது முறியடிக்கப்பட்டு இருக்கிறது.

மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் – சாமுவேல்ஸ் கூட்டணி 2015ஆம் ஆண்டு சிம்பாப்வேக்கு எதிராக 2ஆவது விக்கெட்டுக்கு 372 ஓட்டங்களை எடுத்த சாதனைக்கு அடுத்த இடத்தில் இது இடம்பிடித்துள்ளது.

எனினும், வெறும் 7 ஓட்டங்களினால் இந்த சாதனையை தகர்க்கும் வாய்ப்பை கேம்ப்பெல்–ஹோப் தவற விட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 381 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர், 382 என்ற இமாலய ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணிக்கு இரண்டாவது ஓவரிலே அதிர்ச்சி காத்திருந்தது.

தனது 100ஆவது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய கமர் ரோச், முதல் பந்திலேயே போல் ஸ்டேர்விங்கின் விக்கெட்டை வீழ்த்தினார்.

தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்த அவ்வணி ஒரு கட்டத்தில் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், கெவின் ஓ பிரையன் மற்றும் கெர்ரி வில்சன் ஜோடி அணியை ஓரளவு சரிவிலிருந்து மீட்டது.

இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டுக்காக 131 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது கெவின் ஓ பிரையன் 68 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதனைத்தொடர்ந்து வந்த கெர்ரி வில்சன் 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து வந்த பின்வரிசை வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க அயர்லாந்து அணி 34.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களை பெற்று தோல்வியைத் தழுவியது.

இதன்படி, 196 ஓட்டங்களால் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முத்தரப்பு ஒருநாள் தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது. பந்துவீச்சில் ஆஷ்லி நேர்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஷெனன் கேப்ரியல் 3 விக்கெட்டுகளையும், கிமார் ரோச் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

முத்தரப்பு ஒருநாள் தொடரின் 2ஆவது போட்டி மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இன்று (7) இடம்பெறுகிறது.

Tue, 05/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை