முஸ்லிம்களை அடிமைகளாக வைத்திருக்க சிலர் முயற்சி

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் பல்வேறு காலப்பிரிவுகளில் முஸ்லிம் தலைவர்கள் தமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளின்போது,குரல் கொடுத்து வந்திருக்கின்றார்கள். அந்தவகையில் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃபிற்குப் பின்னர் மிகுந்த துணிச்சலுடன் உரத்த குரலில் தனது சமூகத்துக்காக  குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் குரலை நசுக்குவதற்காக குறிப்பிட்ட சில தரப்பினர் முனைவது மிகுந்த வேதனை அளிக்கின்றது. இவ்வாறு முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பவர்களின் குரல்களை நசுக்கிவிட்டால் முஸ்லிம்களை அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் அடிமைகளாக வைத்திருக்க முடியும் என சிலர் எண்ணுகின்றனர் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.

சமகால முஸ்லிம் அரசியல் நிலை எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பு பாராளுமன்ற உறுப்பினரின் சம்மாந்துறைக் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம்களுக்காக உரத்துக் குரல் கொடுத்து வருகின்ற சில முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது சேறு பூசுவற்காக சில தரப்பினரால் வேண்டுமென்று குற்றம் சாட்டப்பட்டு அவர்களின் குரல்களை நசுக்குவதற்காக முனைகின்றனர்.

முஸ்லிம் அரசியல்வாதிகளான அமைச்சர் றிஷாத் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி, பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் போன்றவர்கள் மீது சில இனவாத குழுக்கள்  தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றன.  துணிகரமாகவும் துணிச்சலுடன் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலும் குரல்கொடுத்துக்கொண்டிருக்கின்ற குரல்களை ஒழிப்பதற்கு இனவாதக் குழுக்கள் ஒன்றுபட்டு செயற்படுகின்றமை மிகுந்த வேதனையைத் தருகின்றது. 

வடமாகாணத்தில் விடுதலைப் புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டபோது தனது மக்களோடு துன்பகரமான வாழ்க்கையை அனுபவித்து வலிகளை நன்குணர்ந்த அமைச்சர் றிஷாத் பதியுதீன் தனது பிரதேச மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவதற்காகவே அரசியலில் நுழைந்து பாராளுமன்ற உறுப்பினராகி சில காலங்களின் பின் மீள்குடியேற்ற அமைச்சைப் பெற்று மக்களின் துயர் துடைப்பதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்துக் கொண்டிருக்கின்றார். 

தனது அமைச்சின் மூலம் அனைவரும் பயனடையும் வகையில் வினைத்திறனுடன் உழைத்து நற்யெரைப் பெற்றிருக்கின்றார். காழ்ப்புணர்ச்சியும் பொறாமையும் கொண்ட இனவாதக் குழுக்கள் அவ்வப்போது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அவர்மீது சுமத்தி வருகின்றனர்.

வில்பத்து, மீள்குடியேற்றம், வீடமைப்புத் திட்டம் என்று வட மாகாணத்தோடு தொடர்புபடுத்தி பேசி வந்தவர்கள்,இன்று பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பற்றி பேச ஆரம்பித்துள்ளனர்.

பாராளுமன்றத்திலும், ஊடகங்களிலும் நீண்டகாலமாக குற்றங்களை சுமத்திவந்தவர்கள் அமைச்சர் குற்றம் செய்திருந்தால் சட்டத்தின் முன் நிறுத்தி அதனை நிரூபித்திருக்கலாம். இதனைச் செய்வதற்கு திராணியற்றவர்கள்  ஏப்ரல் 21 ஆம் திகதி சர்வதேசத்தின் பின்னணியில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை கையில் எடுத்துக்கொண்டு அதனை தங்களது பகையை தீர்த்துக்கொள்ள சந்தர்ப்பமாக பயன்படுத்தி முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக விரல் நீட்டிக்கொண்டிருக்கின்றனர். 

எவ்வித ஆதாரமும் இல்லாத  பத்து விடயங்களை முன்வைத்து அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்திருப்பது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்கும் எதிரான ஒரு செயற்பாடாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.

முஸ்லிம் அரசியல்வாதிகளை புறம் தள்ளி அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பினால்தான் முஸ்லிம்களை நாம் நமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முடியுமென்று  இனவாதக் குழுக்கள்  துவேச கருத்துக்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றன. 

முப்பது வருட கால யுத்த வடுக்களைச் சுமந்த நமது நாட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான விஷமத்தனமான கருத்துக்கள் நமது அமைதி நிலைக்கு குந்தகத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் ஏற்படுகின்றது. இவ்வாறு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக பல்வேறு இனவாதக் குழுக்கள் ஓரணியில் ஒன்றுபட்டு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்கிக்கொண்டிருக்கின்றபோது ஜனநாயகத்தை பாதுகாக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் இதற்கு துணைபோவது ஜனநாயக விரோத செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது என்றார்.

(எம்.ஏ.றமீஸ் -அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்)

 

 

Thu, 05/23/2019 - 11:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை