கொழும்பு தெற்கு துறைமுக அபிவிருத்தி தொடர்பில் கூட்டு ஒப்பந்தம்

கொழும்பு தெற்கு துறைமுகத்தில் அமையப்பெற்றுள்ள கிழக்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய அரசாங்கங்களிடையே கூட்டுறவு ஒப்பந்தமொன்று (Memorandum of Cooperation)  நேற்று (28) முற்பகல் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையத்தில் அமையப் பெற்றுள்ளமையினால் இந்நாட்டிலுள்ள துறைமுகங்கள் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளன. கொழும்பு துறைமுகமானது இப்பிராந்தியத்திலுள்ள முன்னணி துறைமுகமாகும். இவ்வொன்றிணைந்த இணைப்பு திட்டத்தின் மூலமாக இம் மூன்று நாடுகளிடையே காணப்படுகின்ற நீண்டகால புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பு செவ்வனே புலப்படுகின்றது. 1980ம் ஆண்டு கால பகுதியில் ஜப்பான்,  ஜயா கொள்கலன்கள் முனைய (JCT) அபிவிருத்தியின் பொருட்டு தன்னுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது. இந்தியாவுடன் தொடர்புப்பட்டே கொழும்பு துறைமுகத்தின் 70%வீதமான மீள் ஏற்றுமதி வர்த்தகம் முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கை,  ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து கொழும்பு துறைமுகத்தின் எதிர்கால அபிவிருத்தி,  பிராந்திய நலன் மற்றும் சர்வதேச வர்த்தக செயற்பாடுகளின் பொருட்டு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளது.

கிழக்கு முனையத்தின் 100 % வீத உரிமை இலங்கை துறைமுக அதிகார சபையை சாரும். முனைய செயற்பாட்டு நிறுவனம் (Terminal Operation Company) கிழக்கு முனைய செயற்பாடுகளை முன்னெடுக்கும்.

இம்முனையத்தின் 51%  வீத பங்குகள் இலங்கையையும்  49 %  வீத பங்குகள்  கூட்டுறவு பங்குதாரர்களை சாரும்.

இது வரை காலம் இலங்கை பெற்றுக் கொண்ட கடன்களில் ஜப்பானிடமிருந்து பெற்றுக் கொண்ட இக்கடன் தொகையே சிறந்த கடன் தொகையாக கருதப்படுகின்றது. மேலும் இதுவரையில் கைச்சாத்திடப்பட்ட கூட்டுறவு ஒப்பந்தங்களில் இம்முறை இலங்கை துறைமுக அதிகார சபை 51%வீத உரிமையை கொண்டிருப்பது இவ்வொப்பந்தத்தின் சிறப்பம்சமாகும். இப்புதிய முனைய செயற்பாட்டு நிறுவனத்தில் இலங்கை துறைமுக அதிகார சபை அதிகளவான உரிமையை கொண்டிருப்பதானது இச்சபை தேசிய நலனில் கொண்டுள்ள அக்கறையை எடுத்துரைக்கின்றது.  

இம்மூன்று அரசாங்கங்களும் இக்குறித்த கூட்டுறவு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காரணிகளின் அடிப்படையில் தங்களுடைய கலந்துரையாடல்களை முன்னெடுத்து கிழக்கு முனையத்தின் கொள்கலன்கள் செயற்பாடுகளை விரைவாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்.

Wed, 05/29/2019 - 07:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை