ஜப்பானில் பாடசாலை மாணவர்கள் மீது கத்திக்குத்து: சிறுவர் உட்பட மூவர் பலி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த பாடசாலை சிறுவர்கள் மீது கத்தி ஏந்திய நபர் ஒருவர் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளார்.

கவசாக்கி குடியிருப்பு வீதி ஒன்றில் இடம்பெற்ற இந்தக் கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது 18 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 12 வயது சிறுமி ஒருவரும் 39 வயது ஆடவர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

தனது 50 வயதுகளில் இருக்கும் சந்தேக நபர் கழுத்தில் தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்ட நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 16 பேரும் பாடசாலை மாணவிகள் என்று கியோடோ செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து இரு கத்திகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

உள்ளுர் நேரப்படி காலை 7.44 மணிக்கு குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்டதாக தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததென ஏ.எப்.பி செய்தி முகாமையிடம் பேசிய கவாசகி தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பஸ்ஸுக்காக காத்திருந்த மாணவர்களை நோக்கி அந்த நபர் கத்தியுடன் வந்ததை தாம் பார்த்ததாக பஸ் ஓட்டுநர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், “பஸ் வண்டியின் பக்கத்தில் ஒரு நபர் இரத்தம் வழிய அமர்ந்திருந்தார்” என்கிறார்.

சுற்றுப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த சம்பவத்திற்கு அனுதாபம் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு மனநல காப்பகத்தில், கத்தியை கொண்டு அதன் முன்னாள் ஊழியர் தாக்கியதில் 19 பேர் மனநோயாளிகள் இறந்தனர். மனநலம் குன்றியவர்களை இல்லாமல் செய்வதற்காகவே தாம் இவ்வாறாக செய்ததாக அவர் கூறினார்.

2001ஆம் ஆண்டு ஆரம்ப பாடசாலையில் நடந்த இவ்வாறான சம்பவத்தில் 8 மாணவர்கள் இறந்தனர்.

Wed, 05/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை