வெற்றித் தலைவருக்கு வாழ்த்துகள்

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையை பெற்று பிரதமராக மீணடும் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

இந்தியாவிலுள்ள 542 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி முதல் இம் மாதம் 19ஆம் திகதிவரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. வெளியாகிய தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஆளும், பா.ஜ.க தலைமையிலான கூட்டணி வரலாறுகாணத அறுதிப் பெறும்பான்மையுடன் வெற்றிபெற்றது.

இந் நிலையில் நாளை மறுதினம் 26ஆம் திகதி இரண்டாவது முறையாகவும் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்கள் அனைவரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த வாழ்த்துச் செய்தியில்,

நரேந்திர மோடியினால் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகள் தொடர்பில் இந்திய மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி கிடைத்துள்ளது.

இந்த வெற்றியானது நரேந்திர மோடி தலைமை வகிக்கும் கட்சிக்கும் அதன் கூட்டு அரசியல் கட்சிகளுக்கும் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கு அந் நாட்டு மக்களால் மீண்டும் ஒருமுறை வழங்கப்பட்ட சிறப்பான சந்தர்ப்பமாகும்.

பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த ஆட்சி காலத்தில் இந்தியா பல வெற்றிகளை அடைந்துள்ளது. பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார மறுசீரமைப்புகள் இடம்பெற்றுள்ளது.

அண்டை நாடான இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே வலுவான நட்புறவு பேணப்பட்டு வருவதுடன், நரேந்திர மோடியுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்ற வகையில் எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு தொடர்புகளை மேலும் பலப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

உலகின் பலமான பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இந்தியா, இந்து சமுத்திர வலயத்தின் வளர்ச்சிக்காக முக்கிய பங்கை ஆற்றிவருவதுடன், அந்த எண்ணங்கள் வெற்றியடைவதற்கு இலங்கை இந்தியாவுடன் நெருங்கி செயற்படுவதற்கு எதிர்பார்த்துள்ளது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் பிரதமராகவுள்ள மோடியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள டுவிட்டர் செய்தியில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பொதுத் தேர்தல் பெறுபேறுகள் நேற்று வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் பிரதமராக மோடி வெற்றிபெறுவது உறுதியானதையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்த முதலாவது வெளிநாட்டுத் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான உங்கள் பயணம் தொடரட்டும்.

கைகோர்த்துச் செயற்பட தயாராகவுள்ளோமென தெரிவித்துள்ளார்.

Fri, 05/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை