அமைச்சர்கள், எம்.பிக்களுக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல்

எட்டு அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இஸ்லாமிய தீவிரவாத தற்கொலை குண்டுத்தாரியினால் தாக்கப்படும் சாத்தியம் இருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்றுத் தெரிவித்தார்.

அதேநேரம் தானும் இலக்கு வைக்கப்பட்டுள்ள அமைச்சர்களில் ஒருவர் என்று அமைச்சர் சேனாரத்ன குறிப்பிட்டார். தனது அச்சுறுத்தல் தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் தனது வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று தான் எச்சரிக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

பயங்கரவாத தாக்குதல் பற்றி எனது பாதுகாப்பு அதிகாரிகள் என்னை எச்சரிக்கும் போது அதனை தான் கவனத்தில் எடுக்கும் அனைத்து சந்தரப்பங்களிலும் நான் தப்ப முடிந்திருக்கிறது.

வீட்டுக்குள்ளேயே இருங்கள் என்று அவர்கள் கூறினால் நான் அவ்வாறே நடந்துகொள்வேன். என்னை நேற்றும் அதற்கு முதல்நாளும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கூறினர். நான் அவ்வாறே செய்தேன் என்று அமைச்சர் கூறினார்.

எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதல் பற்றியும் நான் அச்சப்படுபவன் அல்ல. அதே நேரம் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை நான் கைவிடப் போவதும் இல்லை. எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கின்றேன் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

இந்நிலையில் தர்கா டவுனில் தனது அதரவாளர்கள் பாதுகாப்பு படையினருக்கு அவர்களது பணியில் ஈடுபடுவதற்கு தடையாக இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் மறுத்தார். அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதை சான்றுடன் நிரூபிக்க முடிந்தால் தான் பதவியில் இருந்து உடனடியாக விலகத் தயாராக இருப்பதாக அமைச்சர் கூறினார்.

அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். தனது வீட்டுக்கு அருகில் வீடொன்றை வாங்க இஸ்லாமிய தீவிரவாதி ஒருவர் முயற்சித்துள்ளார். அந்த வீட்டின் சொந்தக்காரரும் ஒரு முஸ்லிம்தான். அவர் உடனடியாக தனக்கு இது பற்றி தெரிவித்தார். இது தொடர்பாக விசாரிக்குமாறு தான் பொலிஸாருக்கும் சி. ஐ. டி. யினருக்கும் பணிப்புரை விடுத்தேன். இந்த விசாரணையையடுத்து பலர் கைது செய்யப்பட்டனர் என்று அமைச்சர் சேனாரத்ன குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்டவர்களில் சிலர் காத்தான்குடியையும் மொனராகலையையும் சேர்ந்தவர்கள். இங்கு பிரசங்கம் செய்ய வந்ததாகக் கூறினர். இங்கு போதுமான மௌலவிமார் உள்ளனர். அவர்கள் பிரசங்கம் செய்வார்கள். வெளி இடங்களில் இருந்து பிரசங்கம் செய்ய எவரும் வரத் தேவையில்லை. எனவே இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யுமாறு நான் உத்தரவிட்டதாக அமைச்சர் மேலும் கூறினார்.

Wed, 05/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை