ஆண்டகையின் கருத்துகள் ஆதாரமற்றவை

தற்போது நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பேராயர் கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ள கருத்துக்கள் அடிப்படையற்றவை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம். பி. திலங்க சுமதிபால தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது இது தொடர்பில் மேலும் தெரிவித்த சுமதிபால எம். பி.:

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவங்களின் பின்னர் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை என்றும் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஆணைக்குழு தொடர்பில் அதிருப்தியையும்

பேராயர் வெளியிட்டிருந்தார். உண்மையில் ஓய்வுபெற்ற நீதிபதி, ஓய்வு பெற்ற பொலிஸ் மா அதிபர் மற்றும் அமைச்சின் செயலாளரென சிரேஷ்ட, அனுபவமுள்ள பிரதிநிதிகளையே ஜனாதிபதி அவ்வாணைக்குழுவிற்கு நியமித்துள்ளார்.

இத்தகைய அனுபவமுடையவர்களே மேற்படி குழுவுக்கு மிகப் பொருத்தமானவர்கள். அந்த வகையிலேயே ஜனாதிபதி அவர்களை நியமித்துள்ளார்.

நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் போது பேராயர் அவர்கள் ஆணைக்குழு தொடர்பில் கருத்துக்களை முன்வைத்திருந்தார். எவ்வாறெனினும் மேற்படி குண்டுவெடிப்பு இடம்பெற்றதன் பின் முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதி சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்.

நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுவோரில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனங்கள், ஆயுதங்கள் உட்பட பயங்கரவாதிகளின் பெருமளவான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவங்கள் நடந்து ஒருவார காலத்துக்குள்ளேயே நாட்டில் இயல்பு நிலையைத் தோற்றுவிக்கும் வகையில் ஜனாதிபதி முக்கியமான தீர்மானங்களை எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தியுள்ளார். ஜனாதிபதியின் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச நாடுகள் தமது திருப்தியை வெளியிட்டுள்ளதுடன் இலங்கைக்கு உதவுவதற்குத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளன. சிலர் வெளிநாட்டுப் படைகள் இலங்கைக்குள் வரப்போவதாக விமர்சித்து வருகின்றனர். சிறிமாவோ பண்டாரநாயக்கவின் காலத்திலும் அதன் பின்னரும் இந்தியாவிலிருந்து படை உதவிகள் பெறப்பட்டுள்ளன. வெளிநாட்டு படைகளை கொண்டுவருவதாக ஜனாதிபதி எத்தகைய தீர்மானத்தையும் தற்போது எடுக்கவில்லை. அவர் அது தொடர்பில் எதனையும் கூறவும் இல்லை.

வெளிநாடுகளின் அனுபவங்களையும் தொழில் நுட்ப ரீதியான உதவிகளையும் பெற்றுக்கொள்வதே அவரது நோக்கம்.

மேற்படி பயங்கரவாதம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல. இது சர்வதேச தொற்றுக் கிருமியாகும். இதனை ஒழிப்பதற்கு எமது புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்டோர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சர்வதேச பொலிஸ் துறையின் அனுபவம் மற்றும் சர்வதேச ரீதியில் அனுபவமுள்ளவர்களின் யோசனைகளும் பெறப்படும். எமது பொலிஸார், மற்றும் முப்படையினரின் மீது நம்பிக்கை வைத்தே ஜனாதிபதி செயற்படுகின்றார். என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 05/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை