நீர்கொழும்பு பதற்றத்திற்கு இரு குழுக்களே காரணம்

4 பொலிஸ் குழு விசாரணை; இருவர் கைது 

நீர்கொழும்பில் இடம்பெற்ற பெரும் கலவரத்திற்கு அதிக மதுபோதை தலைக்கேறியதன் காரணமாக இரண்டு கும்பல்களுக்கிடையே இடம்பெற்ற வாக்குவாதமே காரணமென விசாரணைகள் மூலம் ஊர்ஜிதமாகியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். 

எவ்வாறாயினும் தற்போது நீர்கொழும்பின் நிலைமை முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். கொச்சிக்கடை போரத்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரத்தின் பிரதான சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் வழங்கும் தகவல்களுக்கமைய மேலும் பலரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார். 

மேலும் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கென நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். 

நேற்று முன்தினம் கொச்சிக்கடை போரத்தோட்டை பிரதேசத்தில் இரண்டு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் பல கடைகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் என்பன அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டன. இதனையடுத்து நேற்றுக் காலை வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது நீர்கொழும்பில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளபோதும் பொலிஸாரும் இராணுவத்தினரும் தொடர்ந்தும் அப்பகுதியில் தேடுதல் நடத்தி வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

(லக்ஷ்மி பரசுராமன்) 

Tue, 05/07/2019 - 10:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை