யாழ்.பல்கலை மாணவர் விவகாரம்; சட்ட மாஅதிபருடன் சுமந்திரன்

நேற்று சந்தித்துப் பேச்சு

விடுதலை தொடர்பில் விரைவில் சாதக முடிவு

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் தியாகி தீலிபன் ஆகியோரது புகைப்படங்கள் காணப்பட்டமை தொடர்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவர் இருவரையும் சிற்றுண்டிச்சாலை நடத்துநரையும் விடுதலை செய்வது தொடர்பாக சாதகமான பதிலை விரைவில் அறிவிப்பதாகப் பதில் சட்ட மாஅதிபர் டப்புள டி லிவேரா உறுதியளித்தார்.

மாணவர்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்துநர் ஆகியோரை  விடுதலை செய்வது தொடர்பாக தற்போது பொறுப்பிலுள்ள பதில் சட்ட மாஅதிபருக்கும் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனுக்குமிடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே பதில் சட்ட மாஅதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த மூவரது விடுதலை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சட்ட மாஅதிபருக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். குறிப்பாக மாணவர்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகியோரது விடுதலை தொடர்பாக கடந்த 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் இரண்டு கடிதங்களை சட்டமா அதிபருக்கு அனுப்பியிருந்தார்.

பதில் சட்ட மாஅதிபருடனான சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த சுமந்திரன்,

"சட்டமா  அதிபருடனான சந்திப்பில், இவ் விவகாரம் தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தேன். குறிப்பாக மாணவர் ஒன்றியத்தில் காணப்பட்ட புகைப்படமானது ஏற்கனவே  காணப்பட்டதுடன், இம் மாணவர்கள் தற்போது புதிதாக நியமிக்கப்பட்டவர்கள். எனவே, அதற்கும் அவர்களுக்குமிடையில் தொடர்பில்லை. அத்துடன் சிற்றுண்டிச்சாலை  நடத்துனரும் அண்மையிலேயே இணைந்துகொண்டவர். அதேநேரம் அந்தப் படமானது உணவருந்தும் இடத்திலேயே காணப்பட்டது.

எனவே, நடத்துனர் அப் பகுதிக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கவில்லை. ஆகவே, இவ் விடயங்களைப் பெரிதுபடுத்தாது அம் மூவரையும் விடுதலை செய்வதற்கு அனுமதியளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டேன்.

மேலும் இவர்களை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்  என்பது தொடர்பாக யாழ்.நீதிமன்றில் சட்டத்தரணி கேசவன் சயந்தன் பிணை விண்ணப்பம் செய்துள்ளார். எனினும், இவ் வழக்கில் சட்ட மாஅதிபரது அனுமதியில்லாமல் நீதிமன்றால் பிணை வழங்க முடியாது. எனவே, அதற்கான அனுமதியை வழங்க வேண்டும் எனவும் இது தொடர்பாக நீதிமன்றுக்கும் பொலிஸாருக்கும் அறிவுறுத்த வேண்டும் எனவும் அவரிடம் குறிப்பிட்டிருந்தேன்.

அத்துடன் வழக்கினை தள்ளுபடி செய்து அவர்களை விடுவிப்பதற்கு காலதாமதம் ஏற்படுமாக இருந்தால், முதலில் அவர்களைப் பிணையிலாவது விடுதலை செய்வதற்கான அனுமதியை வழங்குமாறு வலியுறுத்தியிருந்தேன்.

இதன் போது அவர் இவ் வழக்கு தொடர்பான அறிக்கைகளை எடுத்து வைத்திருந்தார். எனினும், கைது செய்யப்பட்ட மூவரும் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலங்களை அனுப்புமாறு பொலிஸாருக்கு கூறியிருப்பதாகவும் குறிப்பிட்டார். அவற்றின் அடிப்படையில் இவ் விடயம் தொடர்பாக ஆராய்ந்து சாதகமான பதிலொன்றை விரைவில் அறிவிப்பதாக உறுதியளித்திருந்தார்" என்றார்.

(தேவராசா விரூஷன்)

Tue, 05/07/2019 - 10:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை