ஹிப்பிகளுடன் இலங்கைக்குள் ஊடுருவி மக்களை சீரழிக்கும் போதைப் பொருள்!

எமது நாட்டு இளைஞரிடையே ஹெரோயின் போதைப் பொருள் பாவனை 80களின் ஆரம்பத்திலே தொடங்கியது. அது 'ஹிப்பிகள்’ என்று இந்நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மூலமாகும். ஆரம்பத்தில் இதற்கு அடிமையாகியது வழிகாட்டுபவர்களே. விரைவாக பரவிய ஹெரோயினுக்கு எதிராக

நடவடிக்கை எடுக்க தேவையான சட்டங்கள் எமது நாட்டில் அன்று காணப்படவில்லை.

அதனால் அபின் மற்றும் ஆபத்தான ஔடதங்கள் தொடர்பான கட்டளைச் சட்டம் (1984 இலக்கம் 13 திருத்த சட்டம்) மூலம் போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக மரணதண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தை உருவாக்கினார்கள்.

கஞ்சா, அபின் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்களை பாவித்தல், கொண்டு செல்லல் தொடர்பாக தகவல்களை சேகரித்தல் அவற்றை தடுத்தல் மற்றும் அது தொடர்பான விசாரணைக்காக 1973ம் ஆண்டு ஏப்ரல் 01ம் திகதி அமைக்கப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் காரியாலயம் கூட ஆரம்ப நிலையிலேயே காணப்பட்டது.

அந்த அளவிலாவது அவ்வாறான நிறுவனமொன்றை அமைக்க தூரநோக்குடன் சுந்தரலிங்கம் என்னும் பிரதி பொலிஸ் மா அதிபர் செயற்பட்டார்.

இன்று தெற்காசியாவிலேயே போதைப்பொருள் கடடுப்பாட்டு நிர்வாக மத்திய நிலையமாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு காரியாலயம் செயற்படுகின்றது.

பொலிஸ் போதைத்தடுப்பு காரியாலய கணக்கெடுப்பு தரவுகளின்படி தெரியவருவதாவது:

1995ம் ஆண்டிலிருந்து 2018 வரை கடந்த 24 வருடங்களுக்குள் கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் அளவு 2976 கிலோ 459 கிராமாகும்.கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்துக்கும் அதிகமாகும். ஒரே நபர் பலதடவைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் இவற்றில் அடங்குகின்றன.

ஹெரோயின் பாவனை மற்றும் கடத்தல் தொடர்பாக இக்காலப் பகுதியில் அதிகமாக கைது செய்யப்பட்டவர்கள் 30 வயதுக்கு அதிகமானோரே ஆவர். அது நூற்றுக்கு 50 வீதமாகும். இரண்டாவது இடத்திலுள்ளவர்கள் 25 தொடக்கம் 29 வயது வரையானவர்கள். அது நூற்றுக்கு 32 வீதமாகும். 20 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டோர் மூன்றாவது இடத்திலுள்ளார்கள். அவர்களின் வீதம் 10-12 ஆகும். இவர்களில் 86 பேருக்கு தற்போது மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதில் 74 பேர் இந்நாட்டு பிரஜைகளாவர். அவர்களில் 07 பேர் பெண்களாவர். ஏனைய 12 பேரும் வெளிநாட்டவர்கள். அதில் இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் அடங்குகின்றனர்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 197 பேர் ஆயுள்தண்டனை பெற்றுள்ளார்கள். அதில் 102 பேர் இந்நாட்டைச் சேர்ந்தவர்கள். அதில் 27 பேர் பெண்கள். ஆயுள் தண்டனை பெற்றுள்ள வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆகும். அவர்களில் 04 பேர் பெண்களாவர்.

தற்போது போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எமது நாட்டின் இளைஞர் சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க தொகையினரை வசப்படுத்தியுள்ளார்கள். போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் வருடந்தோறும் கைது செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையே அதற்கு சாட்சியமாகும். பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பொலிஸ் போதைத் தடுப்பு காரியாலய பணிப்பாளராக 2001ம் ஆண்டு சேவை புரிந்த போது போதைக்கு அடிமையானவர்கள் 40000 பேர் வரை இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

2004ம் ஆண்டு பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த வேளையில் அத்தொகை ஒரு இலட்சமாகக் காணப்பட்டது. தற்போது அதன் எண்ணிக்கை என்னவென அண்மையில் கணக்கெடுக்கப்படவில்லை. ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை இறுதியாக நடத்திய கணக்கெடுப்பின்படி ஒரு இலட்சத்துக்கு அதிகமானோர் ஹெரோயின் பாவிக்கின்றனர். கஞ்சா, அபின் போன்றவற்றை பாவிப்பவர்கள் எண்ணிக்கை இரண்டு இலட்சமாகும்.

தற்போது எமது நாட்டில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை விபரம் பொலிஸ் போதைப்பொருள் காரியாலயத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிர்வாக பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சீ. டீ. விக்ரமரத்னவின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் போதைப்பொருள் காரியாலய பிரதி பொலிஸ் மாஅதிபர் சஜீவ மெதவத்த உள்ளிட்ட காரியாலய அதிகாரிகளின் நடவடிக்கைகள் மூலம் இவ்விபரம் அறியப்பட்டுள்ளது.

அதன்படி பொலிஸ் போதைத்தடுப்பு ‘காரியாலயத்தில் ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 67654.மேல் மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையானோர் ஹெரோயின் பாவனையில் ஈடுபட்டுள்ளார்கள். அவ்வெண்ணிக்கை 29445 ஆகும்.

இரண்டாவது இடம் தென் மாகாணம். அம்மாகாணத்தில் 9458 பேர் ஹெரோயின் பாவனையாளர்கள் என அறியப்பட்டுள்ளது. வடமேல் மாகாணம், மத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாணங்கள் முறையே 3ஆவது 4ஆவது மற்றும் 5ஆவது இடத்திலுள்ளன.

அதன்படி மிகக் குறைந்தளவானோர் கிழக்கிலும் (151) அதற்கு அடுத்தபடியாக வடக்கிலும் (361) ஹேரோயின் பாவனையாளர்கள் காணப்படுகின்றார்கள்.

பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த "எமது நாட்டுக்கு அதிகளவு ஹெரோயின் கடல் மார்க்கமாகவே கடத்தி வரப்படுகின்றது. இவ்வாறு கடல் மற்றும் ஆகாய மார்க்கமாக கொண்டுவரப்படும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் கடற்படை, இலங்கை சுங்கம், பொலிஸ் விசேட அதிரடிப்படை போன்ற பொறுப்பான நிறுவனங்கள் பல விசேட திட்டங்களை மேற்கொண்டுவருகின்றன" எனத் தெரிவித்தார்.

‘போதைப்பொருள் பாவனை’ வெளியில் தெரிவதை விட மோசமான பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. எமது நாட்டில் தற்கொலைகள் இடம்பெறுகின்றன. எமது நாட்டில் தற்கொலைகளில் அதிகமானவை போதைப்பொருள் பாவனையாலேயே நிகழ்கின்றன. குடும்ப சச்சரவுகளுக்கு காரணம் போதைப்பொருள் பாவனையேயாகும். அதுமாத்திரமல்ல நாட்டில் இடம்பெறும் மோசமான குற்றச்செயல்கள் 80 வீதமானவற்றிற்கு அடிப்படை காரணம் போதைப்பொருள்.

களவு, கொள்ளை அதிகமாக இடம்பெறும் இடங்களில் போதைப்பொருள் பாவனையாளர்கள் அதிகமாக உள்ளார்கள். போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் தேசிய அதிகாரசபை அமைக்கப்பட்டவுடன் பொலிஸ் போதைப் பிரிவு காரியாலயம் போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளித்துள்ளது.

கயான் குமார வீரசிங்க
(சிலுமின)

Sat, 05/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை