பயங்கரவாதத்தை என்றுமே நாம் ஆதரித்தது கிடையாது!

'குண்டுத் தாக்குதல்களின் பின்னர் என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஏனைய சம்பவங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிந்து அதனை வெளிப்படுத்தும் வகையில் பாராளுமன்ற

தெரிவுக்குழுவை அமையுங்கள்' என்று சபாநாயகர் கரு

ஜயசூரியவிடம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். பாராளுமன்றத்தில் அவர்

உரையாற்றிய போது மேலும் கூறியதாவது:

இந்த கொடிய பயங்கரவாதத்தை செய்தவர்களின் பாதகச் செயலால் நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அனைவரும் மிகவும் வேதனையுடன் இருக்கின்றனர். அது மாத்திரமின்றி, இந்த குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டு துன்பத்திலிருக்கின்ற அப்பாவி மக்களின் வேதனைகளில் நாங்களும் பங்குகொள்வதோடு, பாதிக்கப்பட்டவர்கள் வெகுவிரைவில் குணமடையவும் பிரார்த்திக்கின்றோம்.

இஸ்லாம் ஒருபோதும் பயங்கரவாதத்தை ஆதரித்ததில்லை. அடிப்படைவாதத்தையோ பயங்கரவாதத்தையோ என்றுமே இஸ்லாம் அனுமதிக்கவுமில்லை. ஏனைய மதங்களையும் அவர்களின் கலாசாரங்களையும் மதித்து அவர்களோடு சகோதரர்களாக இணங்கிப் போன வரலாறு இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு இருக்கின்றது.

மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு மற்றும் ஈஸ்டர் தினத்தில் நடந்த குரூரத் தாக்குதல்களை எந்தவொரு முஸ்லிமும் ஏற்றுக் கொள்ளவில்லை. இஸ்லாம் மார்க்கம் அதற்கு அங்கீகாரம் வழங்கவும் இல்லை. அதற்கு எடுத்துக்காட்டாகவே தற்கொலைக் குண்டுதாரிகளின் உடல்களைக் கூட நாங்கள் ஏற்றுக் கொள்ளாது நிராகரித்தோம்.இஸ்லாமிய முறையில் அவற்றை அடக்கம் செய்வதற்கும் எமது சமூகம் அங்கீகாரம் வழங்கவில்லை.

சர்வதேச பயங்கரவாதம் இங்குள்ள சில இளைஞர்களையும் தம்வசப்படுத்தி, இந்தக் காட்டுமிராண்டித்தன செயலை நடத்தி நமது நாட்டை குட்டிச்சுவராக்கியுள்ளது. இதனால் எல்லோரினதும் நிம்மதியும் இல்லாமல் போயுள்ளது. இந்த சம்பவத்தை வைத்துக் கொண்டு யாராவது அரசியல் செய்வார்களாயின் அதை விட கொடுமை வேறொன்றுமில்லை. இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்கள் மிகவும் மோசமாக இருந்தன. அன்று ஜனநாயக ரீதியில் செயற்படுவதற்காகவும் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுத வழியில் நாட்டம் கொள்வதைத் தடுப்பதற்காகவுமே எமது தலைவர் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கினார். அவரது இறுதிக் காலத்தில் சமூகங்களை ஒன்றுபடுத்தும் தேசிய ஐக்கிய முன்னணியை உருவாக்கினார். இன்று அவரைக் கூட விமர்சிப்பது வேதனையானது.

புத்தளம் பள்ளியில் முஸ்லிம்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டபோது, அண்ணன் அமிர்தலிங்கம் இந்த உயர்சபையிலே எமக்காகப் பேசினார். அதே போன்று இலங்கை_-இந்திய ஒப்பந்தத்தின்போது இந்த உயர் சபையில் இருந்த பெரும்பான்மைக் கட்சிகளைச் சேர்ந்த எம்மவர்கள் வாய்மூடி மெளனிகளாக இருந்தனர். அத்துடன் வடக்கிலிருந்து நான் உட்பட ஒரு இலட்சம் பேர் வெளியேற்றப்பட்டோம். இஸ்லாமியர் உட்பட பல சமூகத்தினரின் உயிர்கள் கடந்த காலங்களில் காவு கொள்ளப்பட்டன. எனவேதான் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்கி விடக் கூடாது என்பதில் அஷ்ரப் விழிப்பாக இருந்தார். நாட்டின் ஒற்றுமைக்காக உழைத்த அன்னாரை இங்கு பேசிய சிலர் தேவையில்லாமல் விமர்சித்தமை வேதனையானது .

நமது நாட்டில் அனைவரும் மிகவும் துன்பத்தில் உறைந்துள்ளனர். அதேபோன்று முஸ்லிம் என்ற பெயரை வைத்துக் கொண்டு இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை மேற்கொண்டு விட்டனர் என்ற வேதனை மாத்திரமின்றி வெளியில் செல்ல மனம் இல்லாத நிலையில் நாம் வாழ்கின்றோம். எங்களது வீடுகளில் இருக்கும் கத்திகள், வாள்கள் தொலைக்காட்சிகளில் காட்டப்பட வேண்டும் என அரசியல்வாதிகள் சிலர் ஆசைப்படுகின்றனர்.

திகனையில் 30 பள்ளிவாசல்களை அடித்து நொறுக்கினார்கள். இந்த கத்திகளில் அல்லது வாள்களில் எவற்றையாவது கொண்டு வந்து முஸ்லிம்கள் எதிர்த்தாக்குதல் நடத்தினார்களா? அது மாத்திரமன்றி பள்ளிவாசல் நிர்வாகிகளோ உலமாக்களோ ஒருபோதும் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள். தேடுதலின் போது கிடைக்கப் பெற்ற ஆயுதங்கள் தொடர்பில் விசாரணை நடக்கின்றது. விசாரணை முடியும் வரை பொறுமை காப்பதே எல்லோருக்கும் நல்லது. இவற்றை வைத்துக் கொண்டு 22 இலட்சம் முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்காதீர்கள். இந்த உயர் சபையில் பேசிய சிலர் நாங்கள் தான் குண்டைக் கொண்டு வந்து இந்த நாசகார செயலை செய்தது போல் எங்கள் மீது விரல்களை நீட்டுகின்றனர்.

30 வருட யுத்தத்தை மீண்டும் உங்கள் மனக்கண் முன் நிறுத்திக் கொள்ளுங்கள். மீண்டும் ஒரு யுத்தமோ பயங்கரவாதமோ எமக்கு வேண்டவே வேண்டாம். ஒற்றுமையாக வாழ்ந்து நாட்டை சுபீட்ச பாதைக்கு இட்டுச் செல்வோம். இங்கு பேசிய பாராளுமன்ற உறுப்பினர்களின் சிலர் என் மீதும் என் சமூகத்தின் மீதும் மிகவும் அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தினர். எனவேதான் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் தலைமையில் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் புத்திஜீவிகளும் ஒன்றிணைந்து இதனை மிகவும் வன்மையாக கண்டிப்பதாக வலியுறுத்தினோம். பயங்கரவாதத்தை என்றுமே நாம் ஆதரித்தவர்கள் அல்லர். இனியும் நாங்கள் அவ்வாறான தீய வழியில் செல்லப் போவதும் இல்லை என்பதையும் உறுதியாக வெளிப்படுத்தினோம்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நான் பாராட்டுகின்றேன். அவருடைய செயல்பாடுகள் மாத்திரமின்றி அவரின் தொடர்ச்சியான பேச்சுக்கள் எமக்கு மனஆறுதலை தருகின்றன. உணர்வுபூர்வமான, ஆத்திரமான பேச்சுக்கள் மூலம் ஜனாதிபதி முஸ்லிம்களை கொடுமைப்படுத்த வேண்டும் என சிலர் எதிர்பார்க்கின்றனர். ஊடகங்களில் சின்னச் சின்ன விடயங்களை காட்டி சிங்கள மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிரச்சினை உருவாக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்.

என்னைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸநாயக்க தெரிவித்துள்ளார். அது தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளேன். அவருக்கு சட்டத்தரணிகள் ஊடாக கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன். என்னிடம் 3500 ஏக்கர் காணி இருந்தால் அதனை கண்டுபிடிப்பது கடினமானதா எனக் கேட்க விரும்புகிறேன். 52 நாட்கள் அரசியல் பிரளய காலத்தின்போது எனது உதவியை அவர் நாடி, அதற்கு நான் வழிப்படாததாலேயே என் மீது இவ்வாறான வீண்பழியை அவர் சுமத்துகின்றார்.

Sat, 05/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை