24 மணிநேரமும் முப்படையினரும் உஷார்

பொலிஸாருக்கு உச்ச அதிகாரம்

ஹெலிமூலம் படைகளை இறக்க நடவடிக்ைக

74 பேர் கைது; 33 பேருக்கு மறியல்

வன்முறையை முழுமையாகக் கட்டுப்படுத்தும் பொருட்டு வன்முறையில் ஈடுப்படுபவர்களுக்கு எதிராக உச்ச பலத்தை பிரயோகிக்குமாறு நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும்,உயர் அதிகாரிகளுக்கும் பொலிஸ் தலைமையகம் எழுத்து மூலமான உத்தரவை பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். மினுவாங்கொடை மற்றும்  வடமேல் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட சுமார் 74 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களில் சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புபட்ட 33 சந்தேக நபர்கள் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, வன்முறைகள் தொடரப்பில் தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அந்தப் பிரதேசங்களுக்கு உடனடியாக ஹெலிகொப்டர்களை அனுப்பி வன்முறையாளர்கள் தொடர்பான காட்சிகளை வானிலிருந்தவாறே பதியவும், ஹெலி மூலம் துருப்புக்களை இறக்கி நிலைமையைக் கட்டுப்படுத்தவும் விமானப்படைத் தளபதி தீர்மானித்துள்ளதாக விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ன தெரிவித்தார்.

மினுவாங்கொடை மற்றும் வடமேல் மாகாணத்தில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக பாதுகாப்பு மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில் :-

குருநாகல், வாரியபொல, குளியாப்பிட்டி, நிகவரெட்டி, சிலாபம் மற்றும் மினுவாங்கொடை ஆகிய பிரதேசங்களில் மிகவும் குறுகிய நோக்கத்தைக் கொண்ட சில சந்தர்ப்பவாதிகள் ஒன்றிணைந்து மிகவும் மோசமான முறையில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து முப்படையினரும் பொலிஸாரும் உடனடியாக அழைக்கப்பட்டதுடன் நிலைமையக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும், மேற்படி பிரதேசத்திற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதுடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பாதுகாப்பைக் கருதி நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டது. மேற்படி பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளில் சொத்துச் சேதங்கள் பல பதிவாகியுள்ளன. இந்த சம்பவம் இனங்களுக்கிடையிலோ மதங்களுக்கிடையிலோ இடம்பெற்ற மோதல் சம்பவம் அல்ல என்பதையும் மிகவும் கீழ்த்தரமான நோக்கத்தைக் கொண்ட சில சந்தர்ப்பவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன் என்றார்.

எதிர்காலத்தில் வன்முறையில் ஈடுப்படுவபர்களுக்கு எதிராக முப்படையினரும் பொலிஸாரும் உச்ச கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். அத்துடன் இதற்கு பின்னர் வன்முறை ஏற்படுவதை கட்டுப்படுத்த பல்வேறு தீர்மானங்களைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். அதன் முதற் கட்டமாக வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உச்ச பலத்தை பிரயோகிக்குமாறு நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும்,உயர் அதிகாரிகளுக்கும் பொலிஸ் தலைமையகம் எழுத்து மூலமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதேபோன்று வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் அவசரகால சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்திற்கு அமையவே கைது செய்யப்பட்டு நீதிமற்றில் ஆஜர்படுத்தப்படுவர்.

இந்தப் பிரிவுகளுக்கு கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு மஜிஸ்திரேட் நீதிமன்றில் பிணை வழங்கப்படமாட்டாது. மாறாக மேல்நீதிமன்றத்திலேயே பிணை வழங்கப்படும். அத்துடன் இவர்களது குற்றம் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்.

அத்துடன் இது போன்ற வன்முறையில் ஈடுப்பட்ட நிலையில் கைது செய்யப்படுபவர்கள் எதிர்காலத்தில் வெளிநாட்டு பயணத்திற்காக,தொழிலுக்​ேகா அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காவது பொலிஸ் நற்சான்றிதழ்களைப் பெற வரும் சந்தர்பங்களில் அவர்களுக்கு நற்சான்று வழங்கப்படமாட்டது. மாறாக அவர்கள் குறித்த வன்முறையில் ஈடுப்பட்ட வன்முறையாளர்கள் என்று குறிப்பிட்டே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பிலும் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

கைது செய்யப்பட்டவர்கள் விபரம்

மினுவாங்கொடை பிரதேசத்தில் வன்முறையில் ஈடுப்பட்டவர்களில் 9 பேர் நேற்றுமுன்தினம் இரவும், 5 பேர் நேற்றைய தினமும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 14 சந்தேக நபர்களும் மினுவாங்கொடை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு மேமாதம் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதே போன்று வடமேல் மாகாணத்தில் வன்முறைகளில் ஈடுப்பட்ட சுமார் 60 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் வன்முறையுடன் நேரடியாக தொடர்புபட்ட 10 சந்தேக நபர்கள் குளியாபிட்டி மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டும் 9 சந்தேக நபர்கள் ஹெட்டிபொல மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டும் உள்ளனர் இவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

விசாரணைக்குழுக்கள் நியமனம்

குருநாகல் மற்றும் குளியாப்பிட்டி பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராயும் பொருட்டு எதிர்காலத்தில் இது போன்ற வன்முறைகளைத் தவிர்க்கும் பொருட்டும் அந்தந்த பொலிஸ் பிரிவிலுள்ள அதிகாரிகளுக்கு மேலதிகமாக விஷேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு சம்பவம் இடம்பெற்ற பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள் இருவர்,பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவிபொலிஸ் அத்தியட்சகர் எட்டுப்பேர் உள்ளடங்கலாக பத்துப்பேர் கொண்ட குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக சந்தேக நபர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தும் பொருட்டு பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் கொழும்பிலிருந்து மற்றுமொரு குழு விசாரணையை முன்னெடுத்து வருகிறது.

ஊரடங்கு சட்டம்

வடமேல் மாகாணத்தில் அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டம் நேற்றுமாலை 4 மணிக்கு நீக்கப்பட்ட போதிலும், நேற்றுமாலை 6 மணி தொடக்கம் இன்று காலை 6 மணிவரை மீண்டும் அமுல்படுத்தப்பட்டது. அதே போன்று கம்பஹா பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்குச் சட்டம் நேற்று இரவு 7 மணிதொடக்கம் காலை 6 மணிவரையும், நாடு முழுவதிலும் நேற்று இரவு 9 மணிமுதல் இன்று அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்பட்டிருந்தது.

ஸாதிக் ஷிஹான்

Wed, 05/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை