டெங்கு நோயினால் 23 பேர் உயிரிழப்பு

டெங்கு நோயினால் இவ்வருடத்தின் கடந்த நான்கு மாதங்களில் 23பேர் மரணமடைந்துள்ளதாகவும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடத்தில் டெங்கு நோய் அதிகரித்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்தார். இதற்கிணங்க இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை டெங்கு ஒழிப்புக்கான விசேட செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பது போலவே டெங்கு ஒழிப்பிலும் அதிக கவனம் செலுத்துவது அவசியம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் டெங்கு நோயினால் 58பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, இவ்வருடத்தில் நான்கு மாதங்களில் 23பேர் உயிரிழந்துள்ளனர். இது டெங்கு அதிகரிப்பையே காட்டுகின்றது.  

நாட்டில் தற்போதைய சூழ்நிலை காரணமாக டெங்கு ஒழிப்பில் இராணுவத்தினரை ஈடுபடுத்த முடியாத நிலை உள்ளது. சிவில் அமைப்புக்களை அச்செயற்திட்டத்தில் ஈடுபடுத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  

நிர்மாணப் பணிகள் இடம்பெறும் பகுதிகளிலேயே அதிகளவு டெங்கு நுளம்பு உற்பத்தி இடங்கள் காணப்படுகின்றன.

அது தொடர்பில் அறிவிக்கப்பட்டும் குறித்த நிர்மாண ஒப்பந்தக்கார்கள் அதனை அலட்சியம் செய்தால் நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக தடைசெய்ய நேரிடும். அத்துடன் அத்தகைய நிறுவனங்கள் தொடர்பில் ஊடகங்கள் மூலம் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.   (ஸ)  

(லோரன்ஸ் செல்வநாயகம்) 

Wed, 05/08/2019 - 09:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை