பாடசாலைக்குள் அனுமதி மறுக்கப்பட்ட ஆசிரியைகள் 10 பேருக்கும் இடமாற்றம்

பாடசாலைக்குள் அனுமதி மறுக்கப்பட்ட ஆசிரியைகள் 10 பேருக்கும் இடமாற்றம்-10 Muslim Teachers Transferred-Azath Salley

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி நடவடிக்கை

பாரம்பரியமான ஹிஜாப் ஆடையை அணிந்து வந்ததன் காரணமாக பாடசாலைகளுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட 10 முஸ்லிம் ஆசிரியைகளுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

புவக்பிட்டிய தமிழ் மகாவித்தியாலயத்திற்கு தங்களது கடமை நிமித்தம் சென்ற குறித்த பெண் ஆசிரியைகளுக்கு பாடசாலைக்குள் அனுமதி மறுக்கப்பட்டதாக, மேல் மாகாண சபை ஆளுநரிடம் மேற்கொண்ட முறைப்பாடு செய்திருந்தனர்.

தங்களை அனுமதிக்க மறுத்த பாடசாலைக்கு தாம் மீண்டும் செல்ல முடியாது என குறித்த ஆசிரியர்கள் தெரிவித்த அடுத்து, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மேல் மாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.

குறித்த ஆசிரியர்கள், பதியுதீன் முஸ்லிம் கல்லூரி, களுத்துறை

நேற்றைய தினம் (07) நோன்புடன் தங்களது கடமை நிமித்தம் புவக்பிட்டி தமிழ் மகா வித்தியாலயம் சென்ற முஸ்லிம் ஆசிரியைகளை, குறித்த பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் சிலர், அவர்களை கடமைக்கு செல்லாது தடுத்ததோடு, புடைவை அணிந்து வருமாறு தெரிவித்துள்ளனர்.

ஹிஜாப் ஆடை அணிந்து சென்ற அவர்களை, பாடசாலை வாயிலில் வைத்து கடமைக்கு செல்லாது தடுத்துள்ளதோடு, பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் சிலரால் புடைவை அணிந்து வந்தால் மாத்திரமே பாடசாலைக்குள் அனுமதிப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஹிஜாப் அணிவோர் உயிர்த்த ஞாயிறு தினத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்த தீவிரவாதிகளுக்கு ஆதரவானோர் எனவும் குற்றம்சுமத்தியுள்ளனர்.

ஆசிரியைகளின் பிரச்சினைகளை கேட்டறிந்த ஆளுநர், கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் உடனடி கூட்டமொன்றை ஒழுங்கு செய்தார்.

இக்கூட்டத்தில், மாகாண கல்விப் பணிப்பாளர் பி. சிறிலால் நோனிஸ், மாகாண கல்வி செயலளார் எஸ்.ஜே. விஜேபந்து மற்றும் புவக்பிட்டி தமிழ் மகா வித்தியாலய அதிபர் பி. மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பில் கவலை வெளியிட்ட ஆளுநர், குறித்த பாடசாலை ஆசிரியைகள் 10 பேரையும், மேல் மாகாணத்திலுள்ள வேறு பாடசாலைகளுக்கு மாற்றுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

Wed, 05/08/2019 - 15:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை