தீயில் சேதமடைந்த பாரிஸ் பேராலயத்தை மீளமைக்க சர்வதேச ரீதியில் நிதி திரட்டல்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள உலகப் புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயமான நோட்ரடேம் பேராலயத்தில் நேற்று பெரும் தீ விபத்து ஏற்பட்டு முக்கிய பகுதிகள் முற்றாக சேதமாகியதால், தேவாலயத்தை மீளமைப்பதற்கு சர்வதேச ரீதியில் நிதி திரட்டும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்கரோன் தெரிவித்துள்ளார்.

இந்தத் தீ விபத்து மிக மோசமான சோக நிகழ்வு என்றும் 'இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.  

 புகழ்பெற்ற இந்த தேவாலயத்தை மீள் நிர்மாணம் செய்வதற்கு சர்வதேச அளவில் நிதி திரட்டும் செயற்திட்டமொன்றை ஆரம்பிக்கப்போவதாகத் தெரிவித்த அவர், அது பிரான்ஸின் எல்லைக்கு அப்பாலும் திரட்டப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இரண்டு செல்வந்தர்கள் உடனடியாக 300மில்லியன் பவுண்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த தீ விபத்தினால் 850ஆண்டுகள் பழமையான நோட்ரடேம் பேராலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கச் சுவர்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டு இடிந்து விழுந்துள்ளன.  

 தீ விபத்து ஏற்பட்ட தேவாலயத்தை சுற்றியுள்ள வீதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் தேவாலயத்தில் இருந்து கிளம்பிய தீப் பிழம்புகளை வேதனையுடன் பார்த்து கொண்டிருந்ததுடன் சிலர் வீதிகளில் அழுதவாறும் வேறு சிலர் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர். 

கத்தோலிக்க மக்கள் இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை தியானிக்கும் பரிசுத்த வாரத்தை அனுஸ்டிக்கவுள்ள இச் சமயத்தில் இந்தத் தீ விபத்து உலக கத்தோலிக்க மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

பாரீஸில் உள்ள பல தேவாலயங்களிலும் இந்த தீ விபத்து ஏற்படுத்திய சோகத்தை பதிவு செய்யும் வகையில் ஆலய மணிகள் ஒலித்தன.  

பிரான்ஸ் உள்ளூர் நேரப்படி திங்கட் கிழமை மாலை 6.30மணிக்கு ஆரம்பித்த இந்தத் தீ விபத்து மிக குறுகிய நேரத்திலேயே தேவாலயத்தின் மேற்கூரையை முற்றாக சேதப்படுத்தியுள்ளது.  

தேவாலயத்தின் கண்ணாடிகளாலான சாளரங்கள் மற்றும் மரத்தால் செய்யப்பட்ட உட்கட்டமைப்பு ஆகியவை இந்த தீ விபத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.  

இரண்டு மிகப்பெரிய மணிக்கூண்டு கோபுரங்கள் உள்ளிட்ட தேவாலயத்தின் முக்கிய பகுதி தீ விபத்திலிருந்து தப்பியுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், தேவாலயத்தில் உள்ள ஏராளமான புராதன கலைப்பொருட்களைக்காப்பாற்றுவதற்காகத் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடினர் என்றும் தெரிவித்துள்ளார்.  

தேவாலயத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருத்தப் பணிகள் காரணமாக இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் தீ விபத்துக்கான காரணம் இன்னமும் தெளிவாகக் கண்டறியப்படவில்லை. 

தேவாலயத்தின் சுவரில் சில பகுதிகளில் வெடிப்புகள் ஏற்பட்டதையடுத்து கட்டிடத்தின் அமைப்புக்கு சேதம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் மறுசீரமைப்புப் பணிகள் சில நாட்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

பாரீஸில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான இந்த பேராலயம் பாரிஸ் ஈபில் கோபுரத்தைவிட சிறப்பானதாகும். இந்த தேவாலயத்துக்கு ஒவ்வொரு வருடமும் 13 மில்லியன் மக்கள் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.   (ஸ)

Wed, 04/17/2019 - 11:27


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை