தேடப்பட்டுவந்த லொறி பொலிஸாரால் நேற்று மீட்பு

குண்டுத் தாக்குதலுக்கு தயாரான நிலையில் இருந்ததாகக் கூறப்பட்டு பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த WPDAE-4197 இலக்க சந்தேகத்திற்கிடமான லொறியை நேற்றைய தினம் வத்தளை நாயக்ககந்த பகுதியில் வைத்து கைப்பற்றியுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.மேற்படி லொறியின் உரிமையாளரான வெல்லம்பிட்டி நவகம்புர பகுதியைச் சேர்ந்த நபரையும் கைதுசெய்துள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 21 ஆம் திகதி ஷங்ரில்லா ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் தற்கொலை குண்டுதாரியாக செயற்பட்ட மொஹமட் அஸாம் மொஹமட் முபாரக் ஆகியோரின் பெயரிலேயே இந்த லொறி பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த 22 ஆம் திகதி கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கருகில் விசேட அதிரடிப்படையினரால் பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்பட்ட வானும் அவரது பெயரிலேயே பதிவுசெய்யப் பட்டிருந்த தாகவும் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையிலுள்ள மேற்படி தற்கொலை குண்டுதாரியின் மனைவியின் வீட்டு முகவரியிலேயேஇந்த லொறி பதிவுசெய்யப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது லொறியின் உரிமையாளராகவுள்ள நபர் இந்த லொறியை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக மொஹமட் அஸாம் மொஹமட் முபாரக் என்பவரிடமிருந்து லீஸிங் முறையில் கொள்வனவு செய்துள்ளார்.

பல தவணைகள் செலுத்த வேண்டியுள்ளதால் அவர்,

அந்த லொறியை தமது பெயரில் பதிவுசெய்யாமல் மொஹமட் அஸாம் மொஹமட் முபாரக் என்பவரின் பெயரிலேயே பதிவுசெய்து லீஸிங் தவணையை செலுத்தி வந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

கைப்பற்றப்பட்ட லொறி கொட்டாஞ்சேனை பொலிஸாரின் பொறுப்பில் வைக்கப்பட்டதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த உயரதிகாரி தெரிவித்தார். (ஸ)

(லோரன்ஸ் செல்வநாயகம்)

Fri, 04/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை