நிர்க்கதியான நேரங்களில் பொறுமைகாப்பதே எதிரிகளை தண்டிக்கும் இலகு வழி

அமைச்சர் சஜித்

நீர்கொழும்பு,கட்டுவப்பிட்டிய சென். செபஸ்தியன் கத்தோலிக்க தேவாலயத்திற்கு நேற்று (22) விஜயம் செய்த அமைச்சர் சஜித்பிரேமதாச பிரதேசவாசிகளைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் மக்கள் முன் உரையாற்றினார்.இதில் பேசிய அவர்,

தேவாலயங்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இப்பிரதேசத்தில் அமைதியைக் கொண்டு வரும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தாக்குதலில் சேதமுற்ற சென்செபஸ்தியன் கத்தோலிக்க தேவாலயத்தை எனது அமைச்சின் நிதியைக் கொண்டு புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.

இது தொடர்பில் கார்டினல் மெல்கம் ரஞ்சிதுடனும் பேசியுள்ளேன். இதில் உயிரிழந்தோரின் குடும்பத்தாரின் துக்கங்களுடன் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்.

நீர்கொழும்பு பிரதேசத்திற்கு பொறுப்பான பாதிரியார் என்டனீ ஜயகொடி தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அமைச்சர் ஹர்ஷ த சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் காவின்த ஜயவர்தன, டாக்டர் சுதர்ஷனீ பர்ணாந்து புள்ளே, விஜித் விஜிதமுனி சொய்சா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நீர்கொழும்பு நகரத்தின் முதல்வர் தயான் லான்ஸா மற்றும் அரசியல் பிரமுகர்கள் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட அரச அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.

நீர்கொழும்பு மாவட்ட ஆஸ்பத்திரியின் பணிப்பாளர் டாக்டர் சந்திரகுப்த ரணசிங்கவும் இங்கு உரை நிகழ்த்தினார்.

நீர்கொழும்பு, கட்டுவப்பிட்டிய தேவாலயத்தின் பாதிரியார் சிறிலால் பொன்சேகா தலைமையில் பாதிரியார்கள் உட்பட பௌத்த மதத்தைச் சேர்ந்த பௌத்த குருமார்களும் கலந்து கொண்டனர்.

(நீர்கொழும்பு தினகரன் நிருபர்)

Tue, 04/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை