பாதுகாப்பை மேலும் பலப்படுத்த சட்ட அதிகாரம் கோரும் இராணுவம்

பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதியிடம் ​வேண்டுகோள்

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு பாதுகாப்பை மேலும் பலப்படுத்த தேவையான சட்ட அங்கீகாரத்தை சட்ட விதிமுறைகளுக்கு அமைய இராணுவத்திற்கு வழங்குமாறு பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது ஜனாதிபதியிடம் வேண்டுகோளை முன்வைத்ததாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.

தேவையேற்படும் பட்சத்தில் பொலிஸார் இல்லாத நிலையில் வீதி மற்றும் வீடுகளை சோதனையிடுவதற்கும் இச் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கும் தேவையான விஷேட அங்கீகாரத்தை வழங்குமாறு கோரியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கிறிஸ்தவ தேவாலயங்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட எட்டு இடங்களை இலக்கு வைத்து நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவுக்கும் இடையிலான விஷேட சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் இடம்பெற்றது.

இந்தசந்திப்பின் போது இருவரும் தற்போதுள்ள நிலைமையை சுமுகபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக கலந்துரையாடியுள்ளனர். இதன் போது இராணுவத் தளபதி தனது அனுதாபத்தை தெரிவித்ததுடன் பாதுகாப்பு சபையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் எடுத்து கூறினார். அத்துடன் பாதுகாப்புப் படையினர் தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் தகவல்கள் தொடர்பில் இதனைவிட கூடுதல் கரிசனை கொண்டிருக்க வேண்டும் என்று பேராயர் கேட்டுக் கொண்டதுடன் உலக நாடுகளில் புலனாய்வுத் துறையினருடன் ஒப்பிடுகையில் நாம் பின்தங்கியிருப்பதை இந்தச்சம்பவம் எடுத்து காட்டுவதாக சுட்டிக்காட்டினார்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராணுவத் தளபதி மேலும் குறிப்பிடுகையில் :-

இந்தத் தாக்குதல் சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது? இது போன்ற சம்பவம் மீண்டும் இடம்பெறாமல் இருக்க முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக இன்றைய (நேற்றைய) பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது விரிவாக ஆராயப்பட்டது. ஒவ்வொரு படைகளுக்கும் ஒவ்வொரு விதமான பொறுப்புக்கள் உள்ளன. முப்படை, பொலிஸார், நீதி அமைச்சசு தரப்பினர் என்ற அடிப்படையில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய பொறுப்புக்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இதன் போது ஜனாதிபதி அறிவுறுத்தல்களை வழங்கினார் என்றார்.

ஸாதிக் ஷிஹான்

Tue, 04/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை