ஊடகத்துறையை தொழில் வாண்மையாக அங்கீகரிப்பதற்குத் துரித செயல் திட்டம்

தினகரன் கோரிக்கைக்கு வடக்கு ஆளுநர் ராகவன் உறுதிமொழி 

ஊடகத்துறையை தொழில் வாண்மை மிக்கதாக அங்கீகரிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்வதாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். 

தினகரன் பத்திரிகையின் இணை அனுசரணையில் நான்காவது சர்வதேச தமிழ் இதழியல் மாநாடு யாழ் பொது நூலகத்தில் நேற்று முன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வடக்கு ஆளுநர் பிரதம விருந்தினராகவும், துறைசார் வல்லுனர்கள், பேராசிரியர்கள் எனப் பலரும் விருந்தினர்களாகக் கலந்து கொண்டிருந்தனர்.  

இந் நிகழ்வில் தினகரன் பத்திரிகையின் சார்பில் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆளுநரின் உரையின்போது பதில் அளித்தார். இலங்கையில் இதழியல் அதாவது ஊடகத்துறை இன்னமும் தொழில் வாண்மையுள்ள துறையாக அங்கீகரிக்கப்படவில்லை என்றும் அதனை அங்கீகரிக்க வேண்டுமென்றும் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டது.  

இந்நிலையில், நிகழ்வில் பிரதம விருந்தினரான ஆளுநர் கலாநிதி ராகவன், தினகரன் பத்திரிகை சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்ற தன்னாலான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்வதாகப் பதிலளித்தார்.  

"என்னுடைய வாழ்வில் நான் சில விடயங்களுக்குப் பயப்படுவேன். அதில் முதலாவதாக கரப்பான் பூச்சிக்கும் அடுத்தது ஊடகத்துறைக்கும் தான். நானும் ஓர் ஊடகவியியலாளனாக இருந்தே தற்செயலாக ஆளுநராக வந்திருக்கின்றேன்.  

ஆனால், இன்றைக்கு ஊடக நாகரிகம் அல்லது ஊடக சம்பிரதாயம் என்பன கேள்விக்குறியாக்கப்பட்டு வருகின்றன. ஊடகங்கள் வியாபார நோக்கில் செயற்படுகின்றன. ஆகவே, ஐனநாயகத்தின் நான்காவது தூண் எனக் குறிப்பிடப்படும் ஊடகத்துறையைச் சரியான முறையில் வளர்த்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியமானது.  

இவ்வாறான நிலையிலையே ஊடகத்துறையை தொழில்வாண்மை மிக்கதான தொழிலாக இலங்கையில் அங்கீகரிக்கப்படவில்லை என்று இங்கு குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அவ்வாறு அங்கிகரிக்கப்படாததையிட்டு நான் வெட்கப்படுகின்றேன்.  

ஆகவே, ஊடகத்துறையை தொழில் வாண்மை மிக்க துறையாக அங்கிகரிப்பதற்கு என்னாலான அனைத்த நடவடிக்கைகளையும் மிக விரைவாகவே நான் முன்னெடுப்பேன் என்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் ஆளுநர் சுரேன் இராகவன் மேலும் தெரிவித்தார்.  

(பருத்தித்துறை விசேட நிருபர்)  

Sun, 04/07/2019 - 11:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை