பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க எம்மிடம் வலுவான சட்டங்கள் இல்லை

சர்வதேசத்துடன் இணைந்தே சாத்தியமாகும்

பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக் கட்டும் வகையில் எமது சட்டங்கள் வலுவானதாக காணப்படவில்லை. அதனை எதிர்காலத்தில் நாங்கள் மாற்றியமைக்க வேண்டிய தேவையுள்ளது. அதேசமயம் சர்வதேசத்தோடு இணைந்தே பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விடுத்திருக்கும் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அச் செய்தியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,-

இன்னொரு தடவை இது போன்றதொரு சம்பவம் நடைபெறுவதற்கு இடமளிக்காத வகையில் நாம் பொறுப்புடன் திட்டங்களை வகுத்துச் செயற்பட வேண்டும்.

இந்த தாக்குதல் அதிர்ச்சியிலிருந்து நாம் இன்னும் விடுபடவில்லை.  இந்த நாட்டை இரத்த களமாக மாற்றுவதே தற்கொலை குண்டுதாரிகளின் நோக்கமாக இருந்தது. என்றாலும் கூட எமது நாட்டு மக்கள் முரண்படுவதற்கு இடமளிக்காமல் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதில் நாம் ஓரளவு வெற்றிக் கண்டுள்ளோம். இந்த குழு தமது தாக்குதல்களை மாவனல்லை சிலையை சேதமாக்கிய சம்பவத்துடன் ஆரம்பித்துள்ளனர். அடுத்ததாக அவர்களின் உளவுத் தகவல்களை வழங்கினார் என்று, எமது அமைச்சர் ஒருவரின் செயலாளரை சுட்டனர். அந்தச் செயலாளர் ஒரு முஸ்லிம் இனத்தவர்.

இன்று அவர்கள் கிறிஸ்தவர்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இப் பயங்கரவாத தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் மிகவும் சிறு குழுவினரே. அதிக தொகையான வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்னும் சிறுதொகையினரையே சட்டத்தின் முன் நிறுத்தவேண்டியுள்ளது. அதனால் ஆபத்து இன்னும் முழுமையாக குறையவில்லை. அதனால் நாங்கள் மிகவும் பொறுப்புடன் பொறுமையாக செயற்படுவதற்கு கடமைப்பட்டுள்ளோம். பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு பொலிஸாருக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் நாம் நமது பங்களிப்பை வழங்க வேண்டும். இத் தாக்குதல்களுடன் தொடர்பான உள்நாட்டு அமைப்புக்கள், நபர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினருக்கு பல தடவைகள் தகவல்கள் கிடைத்தன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை வழங்கி இருந்தனர். அந்த சில முக்கியமான தகவல்கள் எனக்கு கிடைக்கவில்லை என்பது உண்மையே. எனினும் அதன் மூலம் நான் பொறுப்பை விட்டும் ஒதுங்கிக் கொள்ளமாட்டேன்.

நான் நாட்டின் பிரதமர் எனும் அடிப்படையில் இதற்கான கூட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றேன். அரசாங்கம் எனும் ரீதியில் இக் குறைபாடு தொடர்பில் நான் உண்மையாகவே எமது மக்களிடத்தில் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

பேராயர் மல்கம் ரஞ்சித் தலைமையிலான கிறிஸ்தவ மதத் தலைவர்கள், பெளத்த மகா சங்கத்தினர்கள், இஸ்லாமிய, இந்து மதத் தலைவர்கள், சிவில் அமைப்புகள் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க இணைந்து செயற்பட்டனர்.

இங்கு பரவலாகக் காணப்படும் அடிப்படைவாதக் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. பொதுமக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை நான் ஏற்கின்றேன்.

போலிப் பிரசாரங்களுக்கும், வாய்ப்பேச்சுகளுக்கும் குழம்பிவிடாது பொறுமையாக நடவடிக்கைகளை மேற்கொள்வது இந்த சந்தர்ப்பத்தில் மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது.

பயங்கரவாதத்திற்கு உதவுபவர்கள் தொடர்பில் எமது நாட்டில் மிகவும் குறுகிய வட்டத்திலான சட்டமே காணப்படுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் மிகவும் கடுமையாக நடந்துகொள்ளும் அளவிற்கு அவ்வாறான சட்டங்கள் பலமாக இல்லை. நாம் அவற்றை சர்வதேச பயங்கரவாதத்துக்கு முகங்கொடுப்பதற்கு ஏற்றாற் போல் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.

உதவுபவர்களை கைதுசெய்வதற்கு ஏற்றாற் போல் மாத்திரமல்லாமல் அவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் அரசுடைமையமாக்குவது தொடர்பாகவும் சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டியுள்ளது.

 

 

Sat, 04/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை