வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தியில் உள்ள தடங்கல்கள் விரைவில் நீக்கப்படும்

வடக்கு,கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்துவதிலுள்ள தடங்கல்களை களைய,இம்மாகாணங்கிலுள்ள அரசியல் தலைவர்கள், படை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாட வேண்டுமென இரண்டு மாகாணங்களின் ஆளுநர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

வட, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஆறாவது அமர்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம் (03) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.இதன்போதே ஜனாதிபதி இப்பணிப்புரையை விடுத்தார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இம்மாகாணங்களில் அபிவிருத்தியைத் துரிதப்படுத்தவென கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஜனாதிபதி வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியை ஸ்தாபித்தார்.இதன் செயற்பாடுகள் குறித்து ஆராயும்பொருட்டு நடந்த கூட்டத்தில் நிலைமைகள் தொடர்பில் அதிகாரிகள் விளக்கினர்.

இங்குள்ள காணிகளில் பெருமளவு விடுவிக்கப்பட்டுள்ளதாகப் படையினர் தெரிவித்தனர். அதிகாரிகளின் கருத்தை செவிமடுத்த பின்னர் ஜனாதிபதி தெரிவித்ததாவது, அபிவிருத்திகளுக்குத் தடையாகவுள்ளவற்றை அடையாளம் காண்பதில் துரித செயற்பாடு அவசியம்.

கலந்துரையாடல் மூலம் தீர்க்க முடியாத பிரச்சினைகளை முன்மொழிவுகளுடன் தன்னிடம் சமர்ப்பிக்கவும். எதிர்வரும் மே மாதத்திற்குள் இப்பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

2009ஆம் ஆண்டு மனிதநேய மீட்புப் பணிகள் முடிவுக்கு வந்தபோது வட, கிழக்கு மாகாணங்களின் சுமார் 84,675ஏக்கர் காணிகள் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. கன்னிவெடிகள் அகற்றப்பட்ட பின்னர் 2015க்குப் பிறகு காணிவிடுவிப்புகள் துரிதமாக்கப்பட்டன.

இதுவரை 2019மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை பாதுகாப்பு படைகள் வசம் இருந்த 84,675ஏக்கர்களில் 71,178ஏக்கர்கள் விடுவிக்கப் பட்டுள்ளன. இன்னும் பல காணிகள் விடுவிக்கப்பட

உள்ளன.எஞ்சியுள்ள நிலங்களில் நாட்டின் பாதுகாப்பிற்கு பாதகம் ஏற்படாத நிலங்கள் விரைவாக விடுவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உள்ளிட்ட அவ்விரு மாகாணங்களின் மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்ன, பாதுகாப்பு செயலாளர், அரசாங்க அதிபர்கள், முப்படை தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர் .

Fri, 04/05/2019 - 09:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை